ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்துள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக ஆளுநருக்கு எதிராக திமுக அரசு பல எதிர்ப்பு நிலையை எடுத்து வருகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களில் பேசிய பேச்சுக்களுக்கு திமுக அரசு பல நேரங்களில் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. சனாதனம், திராவிடம் குறித்த பேச்சுகளுக்கு திமுகவினரும் கூட்டணி கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஆளுநருக்கு எதிரான அரசியலை திமுக முன்னெடுத்து வருவதாக பாஜக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த சூழலில் அண்மையில் மதுரையில் காவல்துறை அதிகாரிகள் உதவியுடன் 200 போலி பாஸ்போர்ட் வழங்கிய வழக்கை சிபிஐ, என்.ஐ.ஏ விசாரிக்க உத்தரவிடக் கோரி தமிழ்நாடு ஆளுநருக்கு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கடிதம் அனுப்பி இருந்தார். இதனைத்தொடர்ந்து டெல்லி சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக விவகாரங்கள் தொடர்பாக உள்துறை அமைச்சக நிர்வாகிகளுடன் ஆலோசிப்பார் என்று தகவல் வெளியாகியது. ஆளுநர் ஆர்.என்.ரவி-க்கு பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அனுப்பிய புகாரில் தமிழக உளவுத்துறை தலைவராக இருக்கும் டேவிட்சன் தேவாசீர்வாதம் 2018ம் ஆண்டில் மதுரை மாநகர கமிஷனராகப் பொறுப்பேற்ற போது போலி பாஸ்போர்ட் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. இதன் மூலம் தேசப் பாதுகாப்புக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
இதனிடையே தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். இந்த விவகாரம் தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்துள்ளதோடு, பள்ளியில் நேரடியாக விசாரணை நடத்த உள்ளது. இதனால் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பான பயணம் மேற்கொண்டாரா என பல்வேறு யூகங்கள் கிளம்பின.
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தரப்பில் போலி பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.