“டிரம்ப் புதின் சந்திப்பினால் ரஷ்ய உக்ரைன் போர் முடிவுக்கு வருக.. தரையில் சிந்திய ரத்தம் உலர்க” எனக் குறிப்பிட்டு கவிதை எழுதியுள்ளார் வைரமுத்து.
ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, அமெரிக்காவின் அலாஸ்காவில் வரும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் நேரடிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
புதின், ஜெலன்ஸ்கி இருவருமே அமைதியை விரும்புகின்றனர். ஜெலன்ஸ்கிக்கு தேவையான தீர்வுகள் அனைத்தும் கிடைத்துவிட்டன. இனி, நாம் ஏதேனும் ஒரு முடிவுக்கு வர வேண்டும். ஓர் அமைதி ஒப்பந்தம் உருவானால், அது உக்ரைனும் ரஷ்யாவும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள சில பிராந்தியங்களை பரஸ்பரம் மாற்றிக்கொள்ளும் வகையில் இருக்கும். இரு தரப்புக்கும் நன்மை பயக்கும் வகையில் அது நடைபெறும் எனத் தெரிவித்தார்.
மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துவரும் போரை முடிவுக்குக் கொண்டுவர, டிரம்ப் – புதின் சந்திப்பு ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், பேச்சுவார்த்தையில் உக்ரைனைத் தவிர்த்து எடுக்கப்படும் எந்த ஒரு முடிவும் நீடித்த அமைதிக்கு வழிவகுக்காது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், டிரம்ப் – புதின் மேற்கொள்ள இருக்கும் சந்திப்பு தொடர்பாக வைரமுத்து எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:
வாழப் பிறந்தோம்
இயற்கை வழியில்தான்
சாகப் பிறந்தோம்
போர் என்னும்
செயற்கைச் சாவு ஒழிக
டிரம்ப் புதின் சந்திப்பினால்
ரஷ்ய உக்ரைன் போர்
முடிவுக்கு வருக
தரையில் சிந்திய
ரத்தம் உலர்க
உக்ரைனின்
புகையடித்த மரங்களில்
பூக்கள் மலர்க
வெள்ளை
வெள்ளையாய்க்காணும்
கொள்ளைக் குழந்தைகள்
பள்ளி செல்க
உலகத் தலைவர்களே!
உலகம் எதிர்பார்க்கிறது
போர்க்களங்கள் மூடப்படுமென்று
புதிய சூரியன்
திறக்கப்படுமென்று
பாவேந்தரே சொல்லய்யா
“கெட்ட போரிடும் உலகத்தை
வேரொடு சாய்ப்போம்”. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
