பணி நிரந்தரம் கோரி கடந்த 2 வாரங்களாக ரிப்பன் மாளிகை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்களை போலீசார் நள்ளிரவு அப்புறப்படுத்தியிருக்கின்றனர். இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வேதனை தெரிவித்திருக்கிறார்.
சென்னை மாநகராட்சியில் மொத்தம் 15 மண்டலங்கள் இருக்கின்றன. இதில் சில மண்டலங்களில் தூய்மை பணிகள் ஏற்கெனவே தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல மண்டலம் 5 மற்றும் 6ல் தூய்மை பணியை தனியார் வசம் ஒப்படைக்க மாநகராட்சி சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனையடுத்து தூய்மை பணியாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கினர். கடந்த 2 வாரங்களாக வடசென்னையின் பெரும்பாலான பகுதிகளில் குப்பைகள் சரியாக அகற்றப்படவில்லை. தூய்மை பணியாளர்களின் போராட்டத்தால் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்துக்கொண்டே வந்தது.
இதற்கிடையில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. தூய்மை பணியாளர்கள் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரிப்பன் மாளிகையின் வெளியில் போராடி வரும் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரப்பட்டது. நீதிமன்றமும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த உத்தரவிட, அதை அப்படியே ஏற்றுக்கொண்ட காவல்துறை நேற்று முன்தினம் நள்ளிரவு போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தியது. இதற்கு திமுக கூட்டணி கட்சிகள் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.
திருமாவளவன் இது குறித்து கூறியுள்ளதாவது:-
காவல்துறையினர் நள்ளிரவு நேரத்தில் தூய்மை பணியாளர்களை கைது செய்யும் நடவடிக்கை நடவடிக்கையில் இறங்கினார்கள். அந்த நேரத்திலும் அமைச்சர்களை தொடர்பு கொண்டு கைது நடவடிக்கையை தள்ளி போட வேண்டும் என்றும், பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன். ஆனாலும் காவல்துறையினர் திட்டமிட்டபடி போராட்டக்காரர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தவில்லை எனில் நீதிமன்ற அவமதிப்பு ஏற்படும் என காவல்துறையினர் கூறியிருந்தனர்.
காவல்துறையினர் மேற்கொண்ட கைது நடவடிக்கையில் பலர் தாக்கப்பட்டு இருப்பதாக தற்போது தகவல் வெளிவந்திருக்கிறது. இது மிகுந்த கவலை அளிக்கிறது. இது போன்ற நடவடிக்கைகள் அரசின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் காவல்துறையின் நடவடிக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது. போராட்டத்திற்கு ஆதரவளித்தவர்கள் மீது வழக்கு பதிவு போடப்பட்டிருக்கிறது. இந்த தகவல் மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது உடனடியாக அவர்களை விடுதலை செய்வதோடு அவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
