திமுகவின் பாவ மூட்டைகளை விசிக தலைவர் திருமாவளவன் சுமக்க வேண்டாம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக பொதுமக்களைச் சந்தித்து வருகிறார். கொங்கு, டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தை முடித்த எடப்பாடி பழனிசாமி, நேற்று திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டமன்றத் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
திமுக ஆட்சியில் 51 மாதங்கள் வீணடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆட்சியில் பெரிய திட்டங்கள் எதுவும் கொண்டு வரப்படவில்லை. மொத்தமாகவே சட்டம் – ஒழுங்கு சீர் கெட்டுள்ளது. போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரித்துள்ளது. பெண்கள், குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது.
அதேபோல் அதிமுக ஆட்சிக்கு வந்தால், பல லட்சம் மதிப்பில் ஏழை, எளிய மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கப்படும். இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுமையாக இழப்பீடு அளிக்கப்படும். அதிமுகவால் மட்டுமே விவசாயிகளின் பாதுகாப்புக்கு உறுதி கொடுக்க முடியும். அடிப்படை வசதிகளை செய்து கொடுப்போம்.
வேலைவாய்ப்புக்காகத் தெருவில் இறங்கிப் போராடவிட்ட திமுக அரசுக்கு மக்கள் புகட்டப் போகும் பாடம் தான் 2026ஆம் ஆண்டு நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தல். அதேபோல் திமுகவின் பாவ மூட்டைகளை திருமாவளவன் சுமக்க வேண்டாம். மக்கள் மத்தியில் ஒரு மரியாதை இருக்கிறது. அதனை திருமாவளவன் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். சேரக் கூடாத இடத்தில் சேர்ந்துவிட்டு, வேறு வழியின்றி அவர்களை சொல்வதையே திருமாவளவனும் பேசி வருகிறார். அதிமுக தான் அரசியல் செய்கிறது என்று திருமாவளவன் சொல்கிறார். அதனை முதல்வர் ஸ்டாலினிடம் சென்று சொல்லுங்கள். ஏனென்றால் அதிமுக ஆட்சியின் போது போராடிய தூய்மை பணியாளர்களுக்கு வாக்குறுதி கொடுத்தது ஸ்டாலின்.
இப்போது போராடிய தூய்மைப் பணியாளர்களைக் கைது செய்து அடைத்திருக்கிறார்கள். அதனால் தான் திமுகவின் பாவ மூட்டைகளை விசிக தலைவர் திருமாவளவன் சுமக்க வேண்டாம் என்று சொல்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
