சாதி பிரிவினைகள் தான் இந்தியாவின் பலவீனம்: கமல்ஹாசன்!

சாதிய தடைகள் நீக்கப்பட்ட பின்புதான், நாம் ஒரே தேசமாக, ஒரே மக்களாக இணைய முடியும் என்று திருமாவளவன் பிறந்த நாள் விழாவில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் 63-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி. சென்னை, காமராஜர் அரங்கில் நேற்று ‘மதச் சார்பின்மை காப்போம்’ என்னும் கருப்பொருளை மையப்படுத்தி சிறப்பு நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது. மாலை 4 மணி அளவில் விழா தொடங்கியது. விழா மேடைக்கு வந்த திருமாவளவனுக்கு சிறுமி பூ கொடுத்து வரவேற்றார். அவரது வாழ்க்கை வரலாறு குறித்து, ஏஐ தொழில்நுட்பத் தில் உருவாக்கப்பட்ட ஆவணப்படமும் வெளியிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து, மதச்சார்பின்மை காப்போம் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. இதில், இயக்குநர் கே.பாக்ய ராஜ், கவிஞர் விவேகா, ஆண்டாள் பிரியதர்ஷினி, இளைய கம்பன், தஞ்சை இனியன், அருண் பாரதி, லாவரதன், புனிதஜோதி ஆகியோர் பங்கேற்றனர். பின் னர். மதச்சார்பின்மை காப்போம் தலைப்பிலேயே ஊடக அரங்கமும் நடைபெற்றது.

இதையடுத்து, இரவு நடை பெற்ற வாழ்த்தரங்கில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் எம்.பி. தமிழ்நாடு பாடநூல் நிறுவனத் தலைவர் ஐ.லியோனி, ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி வே.வனிதா, திரைப்பட இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். கமல்ஹாசன் பேசியதாவது:-

திருமாவளவனின் 40 ஆண்டுகால அரசியல் வாழ்வு சாதாரணமானது கிடையாது. அதில் பல தழும்புகள் இருக்கின்றன. சாதி பிரிவினைகள் தான் இந்தியாவின் பலவீனமாக உள்ளது. சாதியை நீக்கினால் தான் நாம் ஒரே தேசமாக, ஒரே மக்களாக இணைய முடியும். ஒடுக்கப்பட்ட மக்களை அரசியல்மயப்படுத்துவது எளிதான காரியம் அல்ல. அவர்களை அரசியல் மயப்படுத்தும் நபர்கள் அற்புதமானவர்கள். அவர்கள் அடிக்கடி வரமாட்டார்கள். அவர்கள் களத்திற்கு வரும்போது நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஒரு கட்சியை ஆரம்பித்து அங்கீகாரம் வாங்குவது எவ்வளவு சிரமம் என்பது எனக்கு தெரியும். அரசியலில் அரசியல் வேண்டுமா, ஆதாயம் வேண்டுமா என கேட்டால் திருமாவளவன் அரசியலைத் தான் தேர்ந்தெடுக்கிறார். அவரைக் கண்டு நான் வியக்கிறேன். கட்சி ஆரம்பித்து நடத்துவது எவ்வளவு கஷ்டம் என்பது அதை ஆரம்பித்த எனக்கு தெரியும்.

என்னுடைய சாதியை சொல்லி என்னை கிண்டல் செய்வார்கள். எனவே, சாதி தான் எனது முதல் எதிரி. என்னுடைய எதிரி யார் என்று கேட்பவர்களிடம் இதை தான் நான் பதிலாக சொல்கிறேன். பிறப்பினால் நாம் யாருக்கும் தாழ்ந்தவர் கிடையாது. நம்மை விட யாரும் உயர்ந்தவரும் இல்லை. நான் மய்யத்தில் இருப்பதால் இந்த புயல் எங்கெங்கே வீசுகிறது என்று என்னால் பார்க்க முடிகிறது. என்னை மலஹாசன் என்று சொல்றாங்க இங்கே காற்று அடிக்காது. அதான் சொல்கிறார்களே.. மலஹாசன் என்று. மலத்தை என்கிட்ட பேசாத.. மலம் என்றால் என் தாத்தா காந்தியிடம் கேள்.. அள்ளுவார்.. கல்கத்தாவில் 1908-ல் நடந்த நிகழ்ச்சியின் போது காங்கிரஸ் கட்சியினர் எல்லாம் சாப்பிட்டுட்டு அங்கே போய் செய்ய வேண்டியதை செய்தார்கள். காந்தியடிகள் அதை சுத்தம் செய்துவிட்டுத்தான் காலை உணவையே சாப்பிடுவார்.

என்கிட்ட மலஹாசன் என்று சொன்னால் சந்தோஷம்.. சபாஷ் நான் தன் அது.. எங்க தாத்தா அதை அள்ளுவார் நானும் சேர்ந்து அள்ளுவேன். ஆனால், உனக்காக அள்ள மாட்டேன். எனக்காக அள்ளுவேன். ஏனென்றால் கேலி நீங்கள்தானே பண்ணுறீங்க.. அதனால் என்னை நீ கூப்பிடு.. கோபம் எல்லாம் இல்லை. புரிய வைக்கிறேன். நான் பிள்ளைகளை கூட அடித்தது இல்லை. சண்டை போடலாம், கத்தலாம் ஆனால் அடிக்க கூடாது. அதை புரிந்த இன்னொரு சகோதரர் திருமாவளவன் தான். இவருக்கு பிறந்தநாள் சொல்வது கடமையாக இருந்தது. இன்னொரு பெரிய விழா.. சேலத்தில் நடக்கிறது. அதற்கு நான் போக வேண்டும் என்று கனவு கண்டு கொண்டு இருந்தேன். ஆனால் இங்கு வருவது தேவை.. இந்த மேடையை நான் ஆச்சர்யமாக பார்த்தேன். எல்லா வகையான அடக்குமுறைக்கும், ஒடுக்கு முறைக்கும் எதிர்த்து போராடுபவன் ஜனநாயக போராளி. திராவிடம் என்பது எல்லோரையும் சேர்த்தது தான். சிந்து நதி முதல் வைகை நதி வரை பரவி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து இரவு 12 மணி ஆன நிலையில், வான வேடிக்கை நிகழ்த்தப்பட்டது. திருமாவளவன் கேக் வெட்டி நிர்வாகிகளுக்கும். தொண்டர்களுக்கும் வழங்கினார்

திருமாவளவன் பேசியதாவது:-

தூய்மை பணியாளர்கள் விவகாரத்தில் திமுக அரசை எதிர்த்து போராடவில்லை என நம்மை விமர்சிக்கிறார்கள். ஆனால் நான் போராட்ட களத்திற்கு சென்று, தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து முதல்வரை சந்தித்து அவருடைய கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தேன். 13 நாட்களும் அமைச்சர்களுடனும், போராட்டக்காரர்களுடனும் நான் பேசிக்கொண்டிருந்தேன். இந்த விஷயத்தில் போராட்டக்காரர்களின் கோரிக்களை ஆதரிக்கிற அதே நேரத்தில், குப்பை அள்ளும் தொழிலை நிரந்தரப்படுத்தி, காலம் முழுவதும் நீங்கள் அதையே செய்துக்கொண்டிருங்கள் என்று சொல்வது நியாயம் அல்ல. குப்பை அள்ளும் பணியில் இருந்து அவர்களை மீட்க வேண்டும் என்பதே நம்முடைய கோரிக்கை. ஆனால் அவர்களுக்கான பணி நிரந்தரம் என்பது, ‘குப்பையை அள்ளுபவர்களே அள்ளட்டும்’ என்கிற கருத்திற்கு வலு சேர்ப்பதாக இருக்கிறது. ஆக பணி நிரந்தரம் செய்யக்கூடாது என்பதுதான் சரியான கருத்து. அதிலிருந்து அவர்களை மீட்க வேண்டும் என்பதுதான் சமூகநீதி. இவ்வாறு அவர் கூறினார்.