துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளிடம் ஆதரவு கேட்க பாஜக பேசி வருகிறது. இந்த நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலினை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் ஸ்டாலினிடம் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாக்களிக்குமாறு ஆதரவு கோரியுள்ளார்.
குடியரசு துணைத் தலைவராகப் பதவி வகித்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21ஆம் தேதி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருந்தபோதே, ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தனது உடல்நிலை காரணமாக ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்தார்.
ஜெகதீப் தன்கரின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 21 என்றும், பரிசீலனை ஆகஸ்ட் 22 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குடியரசு துணைத் தலைவர் யார்? வேட்பாளராக யாரை நிறுத்தலாம்? என்பது தொடர்பாக ஆலோசிக்க தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு பிறகு பாஜக வெளியிட்ட அறிவிப்பில், மகாராஷ்டிரா ஆளுநராக இருக்கும் சி.பி. ராதாகிருஷ்ணன் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
சி.பி. ராதாகிருஷ்ணனை பொறுத்தவரை, அவர் தமிழகத்தின் கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர். எம்.பி.யாகவும் பதவி வகித்துள்ளார். நீண்ட அனுபவம் கொண்ட அவரை பாஜக வேட்பாளராக அறிவித்ததில் பல்வேறு காரணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய சூழலில், இந்தியா கூட்டணியும் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன. இருப்பினும், பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால் சி.பி. ராதாகிருஷ்ணன் எளிதில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கணிக்கப்படுகிறது. போட்டியின்றி தேர்வு நடைபெறுமானால், அவர் ஒருமனதாக தேர்வு செய்யப்படலாம் என்பதே பில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
இதற்கிடையே, துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளிடம் ஆதரவு கோர பாஜக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. நேற்று இரவு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் ராஜ்நாத் சிங் தொலைபேசியில் பேசி ஆதரவு கேட்டிருந்தார். அதேபோன்று, இன்று திமுக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் தொடர்பு கொண்டு ஆதரவு கேட்டுள்ளார்.
ராஜ்நாத் சிங் பல கட்சித் தலைவர்களுடன் நல்லுறவு கொண்டவர் என்பதால், எதிர்க்கட்சிகளிடமும் வாக்கு ஆதரவை பெறும் முயற்சியில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே ஸ்டாலினிடம் அவர் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.
