குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.சுதர்ஷன் ரெட்டி போட்டியிடுவார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரை அறிவிக்கும் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், திமுக எம்பி கனிமொழி, திரிணமூல் காங்கிரஸ் எம்பி டெரெக் ஓ’பிரையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:-
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து வேட்பாளரை தேர்வு செய்துள்ளன. ஒருமித்த கருத்தின் அடிப்படையில் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இது இந்திய ஜனநாயகத்துக்கும், அரசியலமைப்புக்கும் கிடைத்த மிகப் பெரிய வெற்றி.
அரசியலமைப்பு ஆபத்தில் இருக்கும்போதெல்லாம் அதைக் காப்பாற்ற நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடுகிறோம். இந்த தேர்தலில், நாட்டுக்கு நல்ல பணிகளைச் செய்யக்கூடிய ஒரு வேட்பாளர் தேவை என்று நாங்கள் முடிவு செய்தோம். எங்கள் வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.சுதர்ஷன் ரெட்டி அறிவிக்கப்படுகிறார். பி.சுதர்ஷன் ரெட்டி இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் முற்போக்கான சட்ட வல்லுநர்களில் ஒருவர். ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், குவஹாட்டி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் நீண்ட மற்றும் புகழ்பெற்ற சட்ட வாழ்க்கையை அவர் கொண்டுள்ளார்.
சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதிக்கான நிலையான, துணிச்சலான ஆதரவாளராக அவர் இருந்து வருகிறார். ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கான அவரது அர்ப்பணிப்பையும், அரசியலமைப்பு மற்றும் அடிப்படை உரிமைகளை அவர் பாதுகாத்த விதத்தையும் அவரது தீர்ப்புகள் காட்டும்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் என்பது ஒரு சித்தாந்தப் போர். அனைத்து எதிர்க்கட்சிகளும் இதை ஒப்புக்கொண்டுள்ளன. அதனால்தான் நாங்கள் பி.சுதர்ஷன் ரெட்டியை கூட்டு வேட்பாளராக முன்மொழிந்துள்ளோம். ஆகஸ்ட் 21 ஆம் தேதி அவர் வேட்புமனு தாக்கல் செய்வார். இவ்வாறு அவர் கூறினார்.
எதிர்க்கட்சிகளான இண்டியா கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்ஷன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது பின்னணி குறித்து பார்ப்போம்.
தற்போதைய தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தின் அகுலா மைலாரம் என்ற கிராமத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் 1946-ம் ஆண்டு ஜூலை 8-ம் தேதி பிறந்தவர் சுதர்ஷன் ரெட்டி. ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பில் பட்டம் பெற்ற சுதர்ஷன் ரெட்டி, 1971, டிசம்பர் 27-ம் தேதி ஆந்திரப் பிரதேச பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்தார்.
ஆந்திரப் பிரதேசத்தில் ரிட் மற்றும் சிவில் வழக்குகளை கையாண்ட சுதர்ஷன் ரெட்டி, 1988-90-ம் ஆண்டுகளில் அரசு வழக்கறிஞராகப் பணியாற்றியுள்ளார். 1990-ம் ஆண்டு மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞராக சுமார் 6 மாத காலம் பணியாற்றிய இவர், உஸ்மானியா பல்கலைழக்கழகத்தின் சட்ட ஆலோசகராகவும் சிறிது காலம் பணியாற்றியுள்ளார்.
1995, மே 2-ம் தேதி ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்ற நிரந்தர வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார் சுதர்ஷன் ரெட்டி. அதனைத் தொடர்ந்து, 2005 டிசம்பர் 5-ம் தேதி கவுஹாத்தி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து 2007 ஜனவரி 12-ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட சுதர்ஷன் ரெட்டி, 2011 ஜூலை 8-ம் தேதி ஓய்வு பெற்றார்.
2013-ல் கோவா மாநில முதல் லோக்அயுக்தாவாக நீதிபதி சுதர்ஷன் ரெட்டி நியமிக்கப்பட்டார். எனினும், தனிப்பட்ட காரணங்களால் சில மாதங்களில் அப்பதவியை இவர் ராஜினாமா செய்தார்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக தற்போது மகாராஷ்டிரா ஆளுநராக உள்ள தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
