திமுக தேர்தல் வாக்குறுதிகள் சொன்னது போல மாதம் தோறும் மின் அளவீட்டு முறையை அமல்படுத்தி இருந்தால் பொது மக்களுக்கு 40 சதவீதம் மின் கட்டணம் மிச்சமாகி இருக்கும் எனவும், சமூக நீதிக்கும் திமுகவிற்கும் சம்பந்தமில்லை; இது குறித்து விவாதம் நடத்த நான் தயார், திமுகவினர் யார் வேண்டுமானாலும் வரலாம் என பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் 100 நாட்கள் நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடை பயணம் மேற்கொண்ட அவர் பொதுமக்களை சந்தித்து தொண்டு பிரசுரங்களை வழங்கினார். பின்னர் மேடையில் பேசிய அன்புமணி கூறியதாவது:-
திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. ஆனால் முதலமைச்சர் 100% வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக பொய் சொல்லி வருகிறார். திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ஒரே வாரத்தில் ரத்து என்று சொன்னார்கள். அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தங்களுக்கு பழைய பென்ஷன் திட்டம் மீண்டும் கிடைக்கும் என்று வாக்கு செலுத்தினார்கள். ஆனால் அதையும் திமுக அரசு செய்யவில்லை. பஞ்சாப் ராஜஸ்தான் உள்ளிட்ட இந்தியாவில் உள்ள ஏழு மாநிலங்களில் பழைய பென்ஷன் திட்டம் அமலில் இருக்கும் போது தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இல்லை.
‘சமூக நீதி’ குறித்து விவாதம் நடத்த திமுகவிலிருந்து யார் வேண்டுமானாலும் வரலாம் தனியாக வருகிறேன். சமூக நீதி சமூக நீதி எங்கள் உயிர் மூச்சு நாங்கள் தந்தை பெரியாரின் பேரன்கள் என்று சொல்வார்கள். ஆனால் திமுகவிற்கும் சமூக நீதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சமூக நீதி என்ற வார்த்தைக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு அர்த்தம் தெரியுமா. சமூகநீதி குறித்து விவாதிக்க நான் தனியாக வருகிறேன். என்னுடன் வாதம் செய்ய திமுகவினர் யார் வேண்டுமானாலும் வரலாம். சாதி வாரி கணக்கெடுப்பு குறித்து பேசலாம் 69 சதவீத இட ஒதுக்கீடு குறித்து பேசலாம். திமுகவிலிருந்து யாராவது வர தயாரா?
தமிழ்நாட்டில் ஒரு கோடியே 30 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு சொன்னார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்களில் 75 சதவீத வேலைவாய்ப்புகளை உள்ளூர் இளைஞர்களுக்கு கொடுப்போம் என்று சொன்னார்கள்.. ஆனால் அதனை செய்யவில்லை. அதன் காரணமாக தமிழ்நாட்டில் தற்போது ஒரு கோடியே 30 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள். வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி விட்டார்கள் அவர்களின் எதிர்காலம் வீணாகிவிட்டது. அனைத்து அரசு அலுவலகங்களிலும் முதலமைச்சருடைய படம் மாற்றப்பட்டுள்ளது டாஸ்மாக் கடைகளில் மட்டும் ஏன் முதலமைச்சர் படம் மாட்டப்படவில்லை. மாட்ட வேண்டியது தானே. டாஸ்மாக் கடைகளில் ஒருபுறம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படம். மற்றொருபுறம் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் படம் போடலாமே. போட மாட்டீர்கள் ஏன் டாஸ்மாக்கில் மது விற்பது தவறு என்று தெரியும். பிறகு ஏன் தெரிந்தே இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்குகிறார்கள் என தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
