மாணவி ஸ்ரீமதி தங்கி படித்த விடுதிக்கு அனுமதி பெறவில்லை என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. க
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணம் தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே மாணவி மரணத்துக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய தலைவர் பிரியங்க் கானூங்கோ ஏற்கனவே தெரிவித்து இருந்தார். மேலும் அவர் விசாரணை நடத்த வருகிற 27-ந்தேதி கள்ளக்குறிச்சிக்கு வருகிறார்.
இந்த சூழ்நிலையில் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமையிலான குழுவினர் நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு கலெக்டர் ஷ்ரவன் குமார் ஜடாவத், போலீஸ் சூப்பிரண்டு பகலவன் ஆகியோரை சந்தித்து பேசினர். பின்னர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட கல்வி அலுவலர் சிவராமன், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் இளையராஜா, வருவாய் கோட்டாட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் 3 மணி நேரம் தீவிர விசாரணை செய்தனர். அப்போது, பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை, விடுதியில் தங்கி படித்தவர்களின் விவரம், அந்த விடுதி அனுமதி பெற்று இயங்கியதா?, போதுமான பாதுகாப்பு வசதி உள்ளதா? என்று பல்வேறு கேள்விகளை முன்வைத்து விசாரணை நடத்தினர்.
பின்னர் ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த பள்ளியில் மாணவிகள் தங்கி படிப்பதற்காக விடுதி நடத்த அனுமதி பெறவில்லை. இந்த விடுதியில் 24 மாணவிகளை தங்க வைத்துள்ளனர். முறையாக விதிகள் கடைப்பிடித்திருந்தால் மாணவி ஸ்ரீமதிக்கு பாதுகாப்பு கிடைத்திருக்கும். அனுமதி பெறாமல் விடுதி நடத்தி இருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். இது மாணவி இறப்பு குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கில் சேர்க்கப்படும். இங்கு ஏற்கனவே இருந்த கலெக்டர் ஸ்ரீதர், கடந்த 3 மாதத்துக்கு முன்பு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குழந்தைகள் மற்றும் மாணவிகள் விடுதி நடத்துவதற்கு அனுமதி பெற வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார். ஆனால் பள்ளி நிர்வாகம் மாணவிகள் விடுதி நடத்த அனுமதி பெறவில்லை.
அடுத்தகட்டமாக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு ஸ்ரீமதியை கொண்டு வந்தபோது அவரை பரிசோதனை செய்த டாக்டர், முதலாவதாக பிரேத பரிசோதனை செய்த டாக்டர், மாணவியின் பெற்றோர் ஆகியோரிடம் வருகிற 27-ந்தேதி விசாரணை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில், கனியாமூர் கலவரம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழுவைச் சேர்ந்த 5 பேர் கொண்ட உயரதிகாரிகள் நேற்று கலவரக்காரர்களால் சூறையாடப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது பள்ளியில் காவலாளி அறையின் முன்பு 50-க்கும் மேற்பட்ட தீ அணைப்பான் கருவிகள் மற்றும் 5 கம்ப்யூட்டர்களை போட்டு கலவரத்தில் ஈடுபட்டவர்கள் தீ வைத்து எரித்து இருந்தனர். அதற்கு மத்தியில் 2 ஹார்டு டிஸ்க் மட்டும் எரியாமல் கிடந்தது. இதை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைப்பற்றினார்கள். இதன் பின்னர், டிரோன் கேமரா மூலமாக பள்ளி வளாகம் முழுவதையும் அவர்கள் வீடியோவாக பதிவு செய்து கொண்டனர். மேலும் தடயங்கள் மற்றும் கைரேகைகளை பதிவு செய்தனர்.
இதற்கிடையே மாணவி ஸ்ரீமதி மரணமடைந்து நேற்றுடன் 9 நாட்கள் ஆகும் நிலையில், அவரது உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர் இன்னும் முன்வராமல் இருந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கனியாமூர் கலவரத்தின் போது சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இருந்து எடுத்து செல்லப்பட்ட பொருட்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் இல்லையெனில் அந்த பொருட்களை வைத்திருப்பவர்களும் கலவரம் தொடர்பான வழக்கில் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தண்டோரா போட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று காலை ஈசாந்தை கிராமத்தில் உள்ள ஒரு ஏரியில் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கு சொந்தமான மாணவர்களின் இருக்கைகள் வீசப்பட்டு கிடந்தது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று அங்கு கிடந்த இருக்கைளை கைப்பற்றினர். இதற்கிடையே ஒரு கிராமத்தை சேர்ந்த சிலர் சின்னசேலம் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அப்போது அவர்கள் கலவரத்தை வேடிக்கை பார்க்க சென்ற போது அங்கு கிடந்த 4 பவுன் தோடு நகையை எடுத்து சென்றதாகவும், அதை தற்போது ஒப்படைத்து விடுவதாக கூறி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து விட்டு சென்றனர்.