தவெகவின் அடுத்த மாநாட்டில் ஜெயலலிதா, பழனிசாமி படங்கள் வருமா?: சீமான் கேள்வி!

“மதுரை தவெக மாநாட்டில் அண்ணா, எம்ஜிஆரின் படங்களை எதற்காக வைத்திருக்கிறார்? அடுத்த மாநாட்டில் ஜெயலலிதா, பழனிசாமி படங்கள் வருமா?” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் சீமான் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மதுரையில் நடைபெறும் தவெக மாநாட்டையொட்டி கட்சி சார்பில் மதுரை முழுவதும் வைக்கப்பட்டிருந்த பேனர்கள், கொடிக் கம்பங்களை அகற்ற உத்தரவிட்டுள்ளனர். அவர்களுக்காவது பேனர்களை வைத்தபின் அகற்றச் சொல்கின்றனர். எங்களை எல்லாம் வைக்கவே விடாமல் தடுக்கின்றனர். அரசியலில் இதுபோன்ற நெருக்கடிகளை சமாளித்து தான் வர வேண்டும்.

தவெக மாநாட்டில் மக்களின் முன்பு அக்கட்சித் தலைவர் விஜய் முன்வைக்கும் தத்துவங்களை வைத்துதான் அவர் தம்பியா அல்லது எதிரியா என்பது தெரியவரும். திரும்பவும் திராவிடம், அதே கோட்பாடு, அதே கொள்கை என திமுகவை ஒழிப்பது மட்டுமே ஒருவருக்கு லட்சியமாக இருக்க முடியாது. தான் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வேன் என்ன மாற்றத்தைக் கொண்டு வருவேன் என்பதைத் தெரிவிக்க வேண்டும்.

அண்ணா தோற்றுவித்த கட்சியை ஒழிக்க வேண்டும் என்கிறார் விஜய். ஆனால் அண்ணா, எம்ஜிஆரின் படங்களை மாநாட்டில் வைத்திருக்கிறார். எதற்காக? அடுத்த மாநாட்டில் ஜெயலலிதா, பழனிசாமி படங்கள் வருமா?

விஜய்யின் பின்னால் திரண்டிருக்கும் ரசிகர்கள் அவருக்கு நண்பா, நண்பிகளாக இருக்கலாம். ஆனால் எனக்கு தம்பி, தங்கைகள். அவர்களுக்கு சரியான அரசியல் பாதையை சொல்ல வேண்டியது நமது கடமையாகும். அதற்கு சரியான தத்துவத்தை முன்வைத்து நகர வேண்டும். ஒரு நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டால் அதில் உறுதியாக நின்று செயல்படவேண்டும். ஏற்கெனவே இருக்கும் அரசியல் சாரத்தை கொண்டுவருவதற்கு இன்னொரு அரசியல் கட்சி தேவையில்லை.

தெரு நாய்கள் இல்லை என்றால் எலிகள் பெருகும், அதனால் பிளேக் நோய் வரும். அதனைக் கட்டுப்படுத்த போராட வேண்டியிருக்கும். தெரு நாய்களை முன்பே கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். விலங்கு நல ஆர்வலராக இருந்தாலும் தமக்கு பாதிப்பு ஏற்படும்போது பயம் வந்துவிடும். அதை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியாது. கட்டுப்படுத்தவில்லை என்றால் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். திருடன், பேய் பயத்தை விட நாய் பயம் அதிகம் வந்துவிடும்.

அண்மையில் கனிமொழி எம்.பி கூறும்போது நாங்கள் பாஜக கொள்கைகளில் இருந்து மாறுபடுகிறோம். அவர்கள் தமிழ்நாட்டு நலனுக்கு என்ன செய்தார்கள் எனக் கேள்வி எழுப்பினார். அவரைப் பார்த்து நான் கேள்வி எழுப்புகிறேன்.. நீங்கள் தமிழ்நாட்டு நலனுக்கு என்ன செய்தீர்கள்? ஆபரேஷன் சிந்தூரை ஆதரித்து வெளி நாட்டுகளுக்கு பிரதிநிதியாக சென்று பேசிய போது ஏன் இந்தக் கொள்கை தெரியவில்லை? வாஜ்பாய் ஆட்சியில் அந்தக் கொள்கை ஏற்புடையதாக இருந்தது. அப்போது கூட்டணியில் இருந்தீர்கள். அதனால், குஜராத் கலவரத்தை ஆதரித்து பேசினீர்கள். தற்போது கூட்டணியில் இல்லை, அதனால் அவர்களது கொள்கை ஏற்புடையதில்லை என்கிறீர்கள். இப்போது மணிப்பூர் கலவரத்தை எதிர்த்து பேசுகிறீர்கள்.

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை தடை செய்வது என்பது மகிழ்ச்சியான விஷயம். அதனை வரவேற்கிறேன். தெருவுக்குத் தெரு மதுக் கடைகளை திறந்து வைத்துவிட்டு போதையை ஒழிப்பேன் என கூறுவது எப்படி சாத்தியம். அவர்கள் பாஷையில் குடிசை ஒழிப்பு எனக் கூறி, குடிசையை கொளுத்தி விட்டு குடிசை ஒழிப்பு என்பார்கள். அதேபோல மது ஒழிப்பு எனக் கூறிக்கொண்டு மதுவை குடித்துதான் ஒழிப்பார்கள் போல. இவ்வாறு சீமான் கூறினார்.