விஜய் அறியாமையில் பேசுவதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். ஒரு கட்சிக்குத் தலைவராக இருக்கும் இவரை நம்பி எப்படி தொண்டர்கள் இருப்பார்கள் எனவும் விமர்சனம் செய்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
இன்று மதுரையில் நடைபெற்ற 2ஆவது மாநில மாநாட்டில் அதிமுகவை சீண்டிப் பேசினார் விஜய். விஜய் பேசுகையில் “மக்களுடைய அன்பும், ஆசியும் நம்முடன் இருக்கும்போது பாசிச பாஜக உடன் மறைமுக, நேரடி கூட்டணி எதுக்குங்க.. நாம் உலக மகா ஊழல் கட்சியா என்ன? மக்கள் சக்தியே நம்முடன் அணியா அணியா திரண்டு இருக்கும்போது இந்த அடிமை கூட்டணியில் சேர வேண்டிய அவசியம் நமக்கு எதுக்குங்க?” என்றார். மேலும், “எம்ஜிஆர் உயிரோடு இருக்கும் வரைக்கும் முதலமைச்சர் சீட் குறித்து யாராலும் நினைத்துக்கூட பார்க்க முடியல.. கனவு கூட காண முடியல.. ஆனால் இப்போ அவர் ஆரம்பித்த அந்த கட்சியை, கட்டிக்காக்கிறது யார்? அந்த கட்சி இப்போ எப்படி இருக்கிறது. நான் சொல்லிதான் உங்களுக்கு தெரியனுமா என்ன? அப்பாவி தொண்டர்கள் வேதனையை வெளியே சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள். பொருந்தாக் கூட்டணியாக அதிமுக – பாஜக கூட்டணி உள்ளது” எனப் பேசினார் விஜய்.
விஜய் பேச்சுக்கு பதில் அளிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி இன்று காஞ்சிபுரத்தில் பேசியுள்ளார். எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
அதிமுக யாரிடம் உள்ளது என்று ஒருவர் வரலாறு தெரியாமல் அறியாமையில் பேசுகிறார். இதுகூட தெரியாமல் ஒரு கட்சிக்கு எப்படி தலைவர் இருக்க முடியும்? இவரை நம்பி இவரின் பின்னால் இருப்பவர்களின் நிலை என்ன ஆகும். நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் சில பேர் சில கருத்துகளை தம் இஷ்டம் போல பேசுகிறார்கள். அதிமுக அப்படி அல்ல. ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களைத் தீட்டி, அதன் மூலமாக ஏற்றம் பெற்ற கட்சி அதிமுக. ஒரு மரம் எடுத்ததுமே பழம் தருவதில்லை. பூ பூத்து, காயாகி, கனியைக் கொடுக்கும். அப்படித்தான் எம்ஜிஆர் கட்சி தொடங்கி, உழைத்து ஆட்சியைப் பிடித்தார்.
ஆட்சி அமைக்க கடுமையாக உழைக்க வேண்டும். புதிய கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் நம் தலைவர்களின் படங்கள் வைத்து தான் தொடங்குவார்கள். உழைப்பை தராமல் சிலர் பலனை எதிர்பார்க்கிறார்கள். கட்சி தொடங்கிய உடனே ஆட்சிக்கு வந்துவிடமுடியாது. திமுகவை வீழ்த்தும் ஒரே சக்தி அதிமுக தான். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
