மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் என்று சொல்லக்கூடிய அளவுக்கு விஜய் வளரவில்லை: சரத்குமார்!

“மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் என்று சொல்லக்கூடிய அளவுக்கு நடிகர் விஜய் அரசியலில் வளரவில்லை” என சரத்குமார் கூறியுள்ளார்.

மதுரையில் நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் விஜய் தனது கொள்கை எதிரி பாஜக என்பதை மீண்டும் உறுதிபடத் தெரிவித்தார். நமது கொள்கை எதிரி பாஜக தான் நமது அரசியல் எதிரி திமுக தான் என்று நேற்று மாநாட்டு மேடையில் அறிவித்தார். மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை குறிப்பிட்டு சில கேள்விகளை எழுப்பினார். விஜய் பேசுகையில், “மக்கள் அரசியல் என்ற சவுக்கை கையில் எடுக்கலாமா? யாருக்கு எதிராக என்றுதானே கேக்குறீங்க? வேற யாரு? மறைமுக உறவுக்காரர்களான பாசிச பாஜகவும், பாய்சன் திமுகவும் தான். பிரதமர் நரேந்திர மோடிஜி அவர்களே.. மூன்றாவது முறையாக ஒன்றியத்தின் ஆட்சி அதிகாரத்தை நீங்கதானே கையில் வச்சிருக்கீங்க.. நீங்க ஆட்சிக்கு வந்தது ஒட்டுமொத்த மக்களுக்கும் நன்மை செய்யவா? இஸ்லாமியர்களுக்கு எதிராக சதி செய்யவா? மக்களுக்கு உங்களிடம் கேட்க ஏராளமான கேள்விகள் இருக்கு. அவர்கள் சார்பாக மோடிக்கு கேள்விகளை கேட்க வந்துள்ளேன். தமிழ்நாட்டு மீனவர்கள் கிட்டத்தட்ட 800 பேர் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு, சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். கச்சத்தீவை மீட்டுக் கொடுத்துவிடுங்கள்.. அது போதும். உங்கள் முரட்டுப் பிடிவாதத்தால் நீங்கள் நடத்தும் நீட் தேர்வால் என்னென்ன நடக்கிறது. அதனை ரத்து செய்து விடுங்கள்.. நரேந்திர தாமோதர் தாஸ் மோடியே – மக்களை ஏமாற்றியது போதும். மக்கள் சக்திகளே இல்லாத ஊழல் கட்சிகளை அடிமைப்படுத்தி 2029 வரை சொகுசுப் பயணம் போய்விடலாம் என திட்டம் போட்டு வைத்திருக்கிறீர்கள். இதுதான் நீங்கள் நடத்தும் ஆட்சியா? என்னதான் நீங்க குட்டிக்கரணம் அடித்தாலும், தாமரை இலையில் தண்ணியே ஒட்டாது.. தமிழக மக்கள் எப்படி ஒட்டுவாங்க? ஒரு எம்.பி சீட் கூட தரவில்லை என்பதற்காக தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் எதுவுமே செய்யாமல் ஓரவஞ்சனை செய்கிறது பாஜக அரசு.” எனப் பேசினார் விஜய்.

இந்நிலையில், விஜய் பேச்சைக் கண்டித்துள்ளார் பாஜக நிர்வாகி சரத்குமார். நெல்லையில் இன்று நடைபெற உள்ள பாஜக பூத் கமிட்டி மண்டல மாநாட்டில் பங்கேற்பதற்காக தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்த சரத்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் என்று சொல்லக்கூடிய அளவுக்கு நடிகர் விஜய் அரசியலில் வளரவில்லை. எதை பேசுகிறோம், யாரைப்பற்றி பேசுகிறோம், எதற்காக பேசுகிறோம் என்று கவனத்துடன் கொள்கை ரீதியாகப் பேச வேண்டும்” என்று விஜய்க்கு அறிவுரை கூறினார்.