வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சிதான் அமையும் என்றும், திமுகவை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என்றும் பேசியிருக்கிறார் அமித் ஷா.
நெல்லையில் நடைபெற்ற பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாட்டில் நெல்லை மண்டலத்தில் உள்ளடக்கிய நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் ஆகிய 5 நாடாளுமன்ற தொகுதிகளை சேர்ந்த பாரதிய ஜனதா நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். நெல்லை வண்ணார்பேட்டையில் இன்று தொடங்கிய நெல்லை பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:-
மறைந்த நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன். பாஜகவுக்காக பல தியாகங்கள் செய்தவர் இல. கணேசன். தமிழ் மண்ணைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணனை மிக உயரிய பொறுப்பான துணைக் குடியரசுத் தலைவர் பொறுப்புக்கு முன்னிறுத்திய பிரதமருக்கும் பாஜக தேசிய தலைவருக்கும் முதலில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாநிலங்களவையின் தலைவராக துணைக் குடியரசுத் தலைவர், இந்த மண்ணைத் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் ஆகப்போகிறார் என்ற மகிழ்ச்சியை உங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் முதல் முதலில் தமிழகத்தின் விஞ்ஞானியான ஏபிஜே அப்துல் கலாமை குடியரசுத் தலைவராக அமர்த்தி அழகு பார்த்தோம்.
பிரதமர் நரேந்திர மோடி எப்போதும் தமிழ் மண்ணையும் தமிழ் மக்களை மதிக்கக் கூடியவராக இருந்து வருகிறார். தமிழ் மண், மக்கள், பண்பாடு ஆகியவை பாதுகாத்து கொண்டாடும் வகையில் தஞ்சை ராஜேந்திர சோழனுக்கு மாபெரும் விழா எடுத்து கௌரவப்படுத்தியவர் பிரதமர். காசி தமிழ் சங்கம் என்ற நிகழ்வு ஆண்டாண்டாக நடத்தி வருகிறார்கள். சௌராஷ்ட்ரா தமிழ் சங்க விழா நடத்தப்பட்டு வருகிறது. தெய்வீக புலவர் திருவள்ளுவரின் திருக்குறளை 13 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து தமிழுக்கு அணி சேர்த்துள்ளார்
மதத்தின் பெயரால் அப்பாவி பொதுமக்களை கொலை செய்த மிகப்பெரிய துக்ககரமான நிகழ்வு பகல்காமில் நடந்தது. வேரோடு தீவிரவாதிகளை அழிக்கும் வகையில் பாகிஸ்தானில், வீடு புகுந்து அவர்களை தாக்கி ஆபரேஷன் சிந்தூர் திட்டத்தின் மூலம் பிரதமர் சாதனை படைத்துள்ளார். ஆப்பரேஷன் சிந்தூர் மூலம் தீவிரவாதத்தின் முதுகெலும்பை உடைத்து காட்டி உள்ளார் பிரதமர். ஆபரேஷன் மகாதேவ் மூலம் தீவிரவாதிகள் கண்டறிந்து அழிக்கப்பட்டார்கள்.
திமுக கூட்டணியின் ஒரே லட்சியம் உதயநிதியை முதல்வராக்குவதுதான். ஸ்டாலினின் ஒரே லட்சியம் உதயநிதியை முதல்வராக்குவதுதான். சோனியாவுக்கு அவர் மகன் ராகுலை பிரதமராக்க வேண்டும் என்பதே லட்சியம். ஆனால், தமிழக மக்களை மேம்படுத்துவதே பாஜக – அதிமுக கூட்டணியின் லட்சியம். நான் சொல்கிறேன் ஒரு நாளும் உதயநிதி முதல்வராக முடியாது, ராகுல் காந்தி ஒரு நாளும் பிரதமராக முடியாது. தமிழகத்தில் டாஸ்மாக், போக்குவரத்து, கனிம வளம் என திமுகவின் ஊழல் பட்டியல் நீள்கிறது. இதுமட்டுமா, திமுக ஏராளமான ஊழல்களை தொடர்ந்து செய்து வருகிறது.
குற்றச்சாட்டுக்கு உள்ளாகி, கைது செய்யப்படுவர்கள் பதவியில் நீடிக்கக் கூடாது என்று ஒரு சட்டம் வரக்கூடாது என்று எதிர்க்கட்சிகள் துடிக்கிறார்கள். தமிழகத்தில் சில அமைச்சர்கள் சிறையில் இருந்திருக்கிறார்கள். ஆனால் பதவியில் நீடித்தார்கள். சிறையில் இருப்பவர்கள் ஆட்சியை நடத்தலாமா?
சட்டம் என்ன சொல்கிறது, பிரதமரோ, அமைச்சரோ, முதல்வரோ, சிறை செல்ல நேரிட்டால், அவர்கள் பதவியில் தொடரக் கூடாது. ஆனால், பொன்முடி, செந்தில் பாலாஜி போன்றவர்கள் பல மாதம் சிறையில் இருந்தவர்கள். ஆனாலும் பதவியில் நீடித்தார்கள். சிறையில் இருப்பவர்கள் ஆட்சியில் நீடிக்கலாமா?
இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் ஒரு கனவை கண்டு கொண்டிருக்கிறார்கள். சாமானிய மக்கள் பயன்படுத்தும் பொருட்களின் விற்பனை வரியான ஜிஎஸ்டி மிகப்பெரிய அளவில் குறைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி ஒரு லட்சம் கோடி திட்ட முதலீடு செய்து இளைஞர்களுக்கான புதிய வேலைவாய்ப்பை உருவாக்கி உள்ளார்
இந்தியா முழுவதும் சமநிலைக்கான திட்டத்தை பிரதமர் கொண்டு வந்துள்ளார். தேர்தலில் திமுகவை வேரோடு பிடுங்கி எறிந்து தேசிய ஜனநாயகத்தின் கூட்டணி வெற்றியை அறிவிப்பதற்காக நீங்கள் வந்துள்ளீர்கள். இந்த வெற்றி உங்களால் கொண்டுவர முடியும். வெற்றிக்கான முழக்கத்தை முன்னெடுங்கள்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் 18 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றிருந்தோம். கூட்டணியில் இருந்த அதிமுக 21 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. இவ்விரண்டையும் கூட்டினால் கூட எளிதாக 39 சதவீத வாக்குகளைப் பெற்றுவிடலாம். தேசிய ஜனநாயகக் கூட்டணி என்பது வெறும் அரசியல் கூட்டணியல்ல. தமிழகத்தை மேம்படுத்த, தமிழக மக்களின் வளர்ச்சிக்கான கூட்டணி. இவ்வாறு அமித் ஷா கூறியுள்ளார்.
