இன்ஸ்டாகிராமில் ரோல் மாடலை தேடாதீங்க: மு.க.ஸ்டாலின்!

இன்ஸ்டாகிராமில் உங்களின் ரோல் மாடலை தேடாதீர்கள் என்று மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ் கொடுத்துள்ளார்.

சென்னை குட் ஷெப்பர்ட் நூற்றாண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். இந்த விழாவில் ஸ்டாலின் பேசியதாவது:-

இன்றைக்கு சென்னை நாள். சென்னைக்கு பல அடையாளங்கள் உள்ளன. சென்னையின் அடையாளத்தின் ஒன்று குட் ஷெப்பர்ட் பள்ளி. கல்வியின் பன்முகத்தன்மையை கற்றுத் தந்து ஏராளமான திறமைசாலிகளை உருவாக்கி இருக்கிறீர்கள். கல்விப் பணிகளை கடந்து சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறீர்கள். ஒரு காலத்தில் கல்வி என்பது நமக்கு மறுக்கப்பட்ட ஒன்று. ஏராளமான போராட்டத்திற்கு பின்னரே, கல்விக் கதவுகள் திறக்கப்பட்டது. இப்போதும் கல்விக்காக போராடும் மக்கள் இருக்கிறார்கள். கல்வியை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக தான் காலை உணவுத் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் என்று எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

எல்லோருக்கும் எல்லாம் என்று செயல்படுகிறோம். ஆனால் இந்திய அளவில் பல மாநிலங்களில் வெறுப்புணர்வு தூண்டப்படுகிறது. அதற்கு சில மாநில அரசுகளே துணை போகின்றன. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு சிறுபான்மையினர் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறார்கள். இது நிரந்தரம் அல்ல. இந்தியாவின் மத நல்லிணக்கத்தை கெடுக்க நினைக்கும் சக்திகளின் கூட்டம் ரொம்ப நாட்களுக்கு நீடிக்காது. சாதி, மத பிரிவினை பார்க்காமல் எல்லோரையும் சமமாக பார்க்கும் பண்பை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். தும்பை விட்டுவிட்டு வாலை பிடிக்கக் கூடாது என்று சொல்வார்கள். அப்படிதான் தமிழ்நாடு சமத்துவ பூங்காவாக திகழ வேண்டுமென்றால், மாணவர்கள் இப்போதே அந்த எண்ணத்துடன் வளர வேண்டும். அதனால் தான் பள்ளி நிகழ்ச்சியிலும் அரசியலும், அட்வைஸும் பேச வேண்டியதாக உள்ளது.

சமூகப் படிநிலைகளில் எல்லோருக்கும் எல்லா வாய்ப்புகளும் கிடைப்பதில்லை. வாய்ப்பு கிடைப்பவர்கள் தங்களின் திறமையை வாய்ப்பு இல்லாதவர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். பள்ளியில் படிக்கும் நீங்கள் பட்டப்படிப்பு, ஆராய்ச்சி என்று முன்னேற வேண்டும். மாணவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. தற்போது ஏஐ வளர்ச்சி புதிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. அதற்காக ஏஐ இருக்கு.. நாம் ஏன் படிக்க வேண்டும் என்று நினைக்க கூடாது. எந்த கண்டுபிடிப்பையும் உங்களின் வளர்ச்சிக்காக பயன்படுத்தி இருக்க வேண்டுமே தவிர, அது உங்களின் சிந்தனையை சிதைக்க அனுமதிக்க கூடாது.

அதேபோல் உங்களின் ரோல் மாடலை இன்ஸ்டாகிராமில் தேடாதீர்கள். பொழுதுபோக்கு வாழ்வின் ஒரு அங்கம்தான். ரீல்ஸில் பார்ப்பதை ரியாலிட்டி என்று நம்பாதீர்கள். லைக்ஸ், ரீல்ஸ் ஆகியவை கெத்து இல்லை.. மதிப்பெண்களும், டிகிரியும் தான் கெத்து.. படிப்பது போல நன்றாக விளையாட வேண்டும். அதற்கான உடல்நலனும் முக்கியம். கல்வி, நண்பர்கள், சூழல்தான் குழந்தைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். அதனால் பெற்றோர் தங்கள் குழந்தைகள் சொல்வதை காது கொடுத்து கேட்க வேண்டும். ஒரு பிரச்சனை என்றால், பெற்றோரிடம் பயமின்றி பகிரும் அளவுக்கு நம்பிக்கையை கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.