“வேரோடு பிடுங்கி எறிந்தால் திமுக பெரிதாக முளைக்கும். அமித்ஷாவே நினைத்தாலும் திமுகவை தோற்கடிக்க முடியாது” என பதிலடி கொடுத்துள்ளார் அமைச்சர் கேஎன் நேரு.
பாஜகவின் தென்மண்டல பூத் கமிட்டியின் முதல் மாநாடு நெல்லை மாவட்டம் தச்சநல்லூரில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது திமுகவை வேரோடு பிடுங்கி எறிவோம் என்றார்.
இந்நிலையில், அமித் ஷா பேச்சுக்கு திமுக அமைச்சர் கே.என்.நேரு பதில் கொடுத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நேரு கூறியதாவது:-
விவசாயத்தில் மட்டும்தான் வேரோடு அகற்ற முடியும். எங்களை எதுவும் செய்ய முடியாது. வேரோடு பிடுங்கி எறிந்தால் திமுக பெரிதாக முளைக்கும். அமித்ஷாவே நினைத்தாலும் திமுகவை தோற்கடிக்க முடியாது. 15 ஆண்டுகளாக அந்த வேலையை தான் அவர்கள் செய்கிறார்கள். பாஜகவால் ஒன்றும் செய்ய முடியாது. தொடர்ந்து மு.க.ஸ்டாலின் தான். திமுக கூட்டணிதான் வெற்றி பெற்று வருகிறது. பாஜகவினர் ஆசை ஒருபோதும் நிறைவேறாது. அவர்கள் நினைப்பது எதுவும் நடக்காது. திமுகவிற்கு போட்டியே கிடையாது. தொடர்ந்து திமுக வெற்றி பெறும். இதே நெல்லை தொகுதியில் நாங்கள் வென்று காட்டுவோம்.
அதிமுக – பாஜக கூட்டணி பொருந்தாக் கூட்டணி. அதை வைத்துக்கொண்டு ஆட்சிக்கு வந்துவிடுவோம் என கூறி வருகிறார்கள். கூட்டணி விவகாரத்தில் இரு கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்களும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். மக்களின் பெரும் ஆதரவால் வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று மீண்டும் மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவார். இவ்வாறு அவர் கூறினார்.
