காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: விழாவில் பங்கேற்க பஞ்சாப் முதல்வருக்கு அழைப்பு!

தமிழ்நாட்டில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதன் விரிவாக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்க பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

இந்தியாவுக்கே முன்னோடியாகவும், சர்வதேச அளவிலான தரத்துடனும் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்க விழாவிற்கு பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்பிக்கிறார். இன்று காலை விழா அழைப்பிதழை மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் பஞ்சாப் முதலமைச்சரிடம் நேரில் வழங்கி தமிழ்நாடு முதலமைச்சரின் சார்பில் வரவேற்றார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சிறப்புமிகு திட்டமான காலை உணவு திட்டம் மூலம் அரசு பள்ளிகள் மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகள் வாயிலாக 17 லட்சத்திற்கும் அதிகமான மாணவ மாணவியர் சத்தான உணவுடன் கல்வி கற்று வரும் நிலையில், வரும் ஆகஸ்ட் 26 அன்று இத்திட்டத்தினை நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்து தொடங்கி வைக்கிறது திராவிட மாடல் அரசு. இந்த திட்டம் மூலம் இனி 20 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பசியின்றி பாடம் கற்கும் நிலையை உருவாக்கியுள்ளது திராவிட மாடல் அரசு. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கடந்த 2022ம் ஆண்டு செப்.15ம் தேதி இந்தியாவிலேயே முதல் முறையாக மதுரையில் காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிலையில் இந்த திட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆக.26ம் தேதி சென்னையில் தொடங்கி வைக்கிறார். இதற்காக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.