இந்தியா கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பளரான சுதர்சன் ரெட்டியை அமித்ஷா நக்சல் என விமர்சித்திருந்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தீவிரவாதிகளை ஒழிக்க முடியாத அமித்ஷா, சுதர்சன் ரெட்டியை விமர்சிக்கிறார்” என குற்றம்சாட்டியுள்ளார்.
குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் உடல்நலம் காரணமாக திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இந்நிலையில், புதிய குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. செப்.9ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியின் வேட்பாளராக ஆந்திராவை சேர்ந்த ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து சுதர்சன் ரெட்டி ஆதரவு கோரியிருக்கிறார். சென்னை தி.நகரில் முதலமைச்சரை சந்தித்து சுதர்சன் ரெட்டி ஆதரவு கோரியிருந்தார். இக்கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனினிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, மநீம தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாவது:-
மரியாதைக்குரிய சுதர்சன் ரெட்டி அவர்களே, அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க உச்ச நீதிமன்ற நீதி அரசராக பணியாற்றிய நீங்கள், இந்திய குடியரசு துணைத் தலைவர் பொறுப்புக்கு மிகவும் தகுதி வாய்ந்தவர். அதனால்தான் இந்தியா கூட்டணி சார்பில் உங்களை வேட்பாளரா அறிவித்து இருக்கிறோம். உங்களை ஒரு மனதாக தேர்ந்தெடுத்து அறிவித்த இந்தியா கூட்டணி அனைத்து கட்சி தலைவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியா கூட்டணி மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மீது, மக்களாட்சி தத்துவத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்க கூடிய அத்தனை பேரும், உங்களைத்தான் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளரா ஏத்துக்கிட்டு இருக்காங்க. தென் மாநிலத்தைச் சார்ந்த இவருடைய ப்ரோபைலை எல்லோரும் கவனிக்கணும். உஸ்மானியா யூனிவர்சிட்டியில் சட்டம் பயின்று, 1971ல் வழக்கறிஞர் பயிற்சி செய்ய தொடங்கினர். பின்னர் ஆந்திர மாநில அரசு வழக்கறிஞராகவும், ஒன்றிய அரசோட கூடுதல் நிலை ஆலோசகராகவும், ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தினுடைய நீதிபதியாகவும், கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் முன்னேறி உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பு வகித்து இன்று குடியரசுத் துணைத் தலைவராக உயர்ந்திருக்கிறார்.
கிட்டத்தட்ட தன்னுடைய 60 ஆண்டு கால வாழ்வை சட்டம், நீதி ஆகியவற்றிற்காக அர்ப்பணித்து இருக்கிறார். இவர் நீதி அரசராக பணியாற்றிய காலத்தில் நேர்மையா, சுதந்திரமா செயல்பட்டு மக்களுடைய உரிமைகளையும் சமூகநீதியும் உயர்த்தி பிடித்து, அரசியலமைப்பு சட்டத்தின் மாண்பையும் போற்றி பாதுகாத்தவர். கோவா மாநில லோக் ஆயுக்தா தலைவராகவும் இருந்துள்ளார். இவர் ஏன் இன்னைக்கு தேவைப்படுகிறார் என்றால், அரசியலமைப்பு சட்டத்தை சிதைக்க பாஜக நினைக்கும் இந்த நேரத்தில், அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாத்த நீதி அரசராக இவர் தேவைப்படுகிறார்.
சுதர்சன் ரெட்டி தமிழ்நாட்டுக்கும். தமிழ்நாட்டின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கக்கூடியவர். அதுக்கு ஒரு எடுத்துக்காட்டுதான் புதிய தேசிய கல்விக் கொள்கையை திரும்ப பெற வலியுறுத்தி, ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்’ நடத்துன மாநாட்டில் அவர் பேசுனது. அவர் பேசுனது சுருக்கமாக சொல்லனும்னா, “இது திருவள்ளுவர், பாரதியார், பெரியார், கலைஞர் ஆகியோரின் மண். போராட்டக் குணத்தை எப்போதும் விடுவதில்லை. புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக போராடுவது நம்முடைய கடமை. இது இந்த தேசத்துக்கு நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான பணி. இவர்கள் கொண்டு வர நினைக்கின்ற தேசிய கேள்விக் கொள்கை, மனித மாண்புகளுக்கு எதிரானது. ‘நான், எனது, என்னுடையது’ என்ற கலாச்சாரத்தை மட்டுமே இது உருவாக்கும். பன்முக தன்மையோ, கல்வியும் ஜனநாயக பரவலையோ இது உருவாக்க உருவாக்காது” என்று தன்னுடைய கருத்துக்களை பதிவு செஞ்சு தமிழ்நாட்டோட உணர்வுகளை உறுதியோடு வெளிப்படுத்தினார்.
இப்படி அரசியலமைப்பு சட்டத்துக்காகவும் தமிழ்நாட்டுக்காகவும் முற்போக்குக்காகவும் மக்களுக்காகவும் பேசுகிற வரை நாம் நம்முடைய இதைவிட பெரிய காரணம் தேவையா? ஆனா இவரை, மத்திய உள்துறை அமைச்சர் என்னென்ன சொல்கிறார்? நக்சல் என்று சொல்லுகிறார். ஒரு உள்துறை அமைச்சர் தன்னுடைய பொறுப்பை மறந்து ஒரு முன்னாள் நீதி அரசர் பத்தி அபாண்டமாக பேசியிருக்கிறார். அவங்களால தீவிரவாதத்தை ஒழிக்க முடியல. அந்த கையால் ஆகாத நிலையை மறைக்க நீதியரசர் மேல பழி போட்டு தப்பிக்க பாக்குறாங்க. இவ்வாறு அவர் பேசினார்.
