அறிவியல் சார்ந்து முற்போக்கு சிந்தனையுடன் கல்வித் துறையை நடத்தி வருகிறோம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பி.எம். ஸ்ரீ பள்ளியில் தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பா.ஜ.க. எம்.பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான அனுராக் தாக்குர் கலந்து கொண்டு மாணவர்களுடன் உரையாடினார். அப்போது அவர், “விண்வெளிக்கு முதலில் பயணம் செய்தவர் யார்?” என கேள்வி எழுப்பினார். அதற்கு மாணவர்கள் ஒருமித்த குரலில் “நீல் ஆம்ஸ்ட்ராங்” எனப் பதிலளித்தனர். ஆனால், அதற்கு பதிலளித்த அனுராக் தாக்குர், “எனக்குத் தெரிந்து உலகின் முதல் விண்வெளி வீரர் அனுமன் தான்” எனத் தெரித்தார்.
அவரின் இந்த கருத்துக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் எதிர்வினையை ஆற்றி வருகின்றனர். இதுகுறித்து நெல்லையில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலில், அவ்வாறு பேசுவது அவரது இஷ்டம். அது குறித்து நான் கருத்து கூற முன்வரவில்லை.
ஆனால் நாங்கள் அறிவியல் சார்ந்து முற்போக்கு சிந்தனையோடு தந்தை பெரியார் வழியில் பள்ளிக்கல்வித் துறையை, தமிழக முதல்வர் வழிகாட்டுதலோடு செயல்பட்டு வருகிறது. அறிவைச் சார்ந்து இருக்கும் எங்கள் பாதையில் நாங்கள் செல்லும்போது எங்களோடு பயணிக்க விரும்புபவர்கள் வரலாம் என்றார்.
முன்னதாக சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று அன்பில் மகேஸ் கூறியதாவது:-
அறிவுசார்ந்துதான் தமிழ் மொழியை திமுக உயர்த்தி பிடிக்க நினைக்கிறது. ஆனால், பாஜக போன்ற அரசியல் கட்சிகள் தமிழ் 2,000 ஆண்டுகள் பழமையானது. சமஸ்கிருதம் போன்ற மொழிகள் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானவை எனக்கூறி நமது வரலாற்றை மறைக்கப் பார்க்கிறார்கள்.
தமிழினம் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பை பயன்படுத்தியுள்ளது. ஆனால் அதை மூடி மறைக்கும் வேலையை மத்திய அரசு செய்து வருகிறது. ஆனால், தமிழின் பெருமையை உலக அளவில் எடுத்து செல்வதற்கான முயற்சியில் திமுக இறங்கியுள்ளது. அந்த வகையில் அடுத்து ஆண்டு ஜனவரி மாதம் பன்னாட்டு புத்தக கண்காட்சிக்கு 100 நாடுகளில் இருந்து புத்தகம் மற்றும் தமிழ்மொழி மீது ஆர்வமுள்ளவர்களை வரவழைக்க திட்டமிட்டுள்ளோம்.
முதல்வர் ஸ்டாலினை நடிகர் விஜய் மரியாதை இல்லாமல் பேசியது தவறு. கருணாநிதியின் குடும்பத்துடன் விஜய் குடும்பம் நெருக்கமான உறவு கொண்டவர்கள். உதயநிதியின் நல்ல நண்பனாக இருந்தவர். ஆனால், தற்போது ஒரு அரசியல் கட்சி தொடங்கிவிட்டோம் என்பதற்காக அனைத்தையும் மறந்துவிட்டு பேசுவது சரியல்ல. அதேபோல், திமுகவை வேரோடு பிடுங்கி எறிய வேண்டுமென மத்திய அமைச்சர் அமித் ஷா கருத்து கூறியுள்ளார். அமித் ஷாவுக்கு தமிழகத்தின் அரசியல் பற்றி தெரியவில்லை. 75 ஆண்டுகள் பழமையான கட்சி திமுக. 4 தலைமுறைகளையும் சேர்ந்த தொண்டர்கள் திமுகவில் உள்ளனர். அவர்களுக்கு இருக்கும் அரசியல் சிந்தனை தெளிவானவை. மேலும் திமுக கல்வி, சமூகநீதியுடன் சேர்ந்து வளர்ந்த அரசியல்கட்சி. அவ்வளவு எளிதில் அசைக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
