சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பதிவாளராக (பொறுப்பு) பேராசிரியர் கோபி (வயது 50) என்பவர் புதிதாக நியமனம் செய்யப்பட்டார். இதனால் அவர், பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்த நிலையில் விடுமுறை நாளான நேற்று பதிவாளர் கோபி, பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தனது வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த மாணவி ஒருவருடைய உறவினர்கள், பதிவாளரிடம் திடீரென பேச்சு கொடுத்தனர். இந்த பேச்சு வாக்குவாதமாக மாறியது. வாக்குவாதம் முற்றவே மாணவியின் உறவினர்கள் பதிவாளரை தாக்கியதாக தெரிகிறது.
இதனால் பதிவாளர் கோபி அதிர்ச்சி அடைந்தார். அவர் சத்தம் போடவே, அருகில் குடியிருப்பவர்கள் அங்கு விரைந்து வந்தனர். இதை பார்த்ததும், மாணவியின் உறவினர்கள் அங்கிருந்து ஓடி விட்டனர். காயம் அடைந்த பதிவாளர் கோபி, சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து கருப்பூர் போலீசார் நேரில் சென்று விசாரித்து வருகின்றனர்.
பெரியார் பல்கலைக்கழகம் சார்பில் சமீபத்தில் நடைபெற்ற முதுநிலை பட்டப்படிப்பு வினாத்தாளில் கேட்கப்பட்ட ஒரு கேள்வி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பதிவாளர் தாக்கப்பட்ட சம்பவம் பல்கலைக்கழக பேராசியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.