தமிழகத்தில் ஒரு பிரச்னை என்றால், அதை பேசுவதற்கு, எனக்கு முழு உரிமை உண்டு என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
புதுச்சேரி துணைநிலை கவர்னரும், தெலுங்கானா கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன், புதுக்கோட்டையில், தனியார் கேரளா ஆயுர்வேத சிகிச்சை மருத்துவமனையை துவங்கி வைத்தார். அதன் பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
இயற்கை மருத்துவத்தை ஊக்குவிக்குவதற்காக, பிரதமர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பல நேரங்களில், இயற்கை மருத்துவம் பல்வேறு நோய்களை கட்டுப்படுத்துகிறது. ஆங்கில மருந்தும், இயற்கை மருத்துவமும் இணைந்து செயல்பட வேண்டும். சமூக நீதி என்று கூறிக் கொள்ளும் சிலர், ஜனாதிபதி தேர்தலில் ஓட்டளிக்காமல், பெயரளவிற்கு தான் சமூக நீதியை கூறி வருகின்றனர். இந்த நிகழ்வு, அவர்களின் முகத்தை வெளியே காட்டியுள்ளது.
புதிய கல்விக் கொள்கையால், இன்னொரு மொழியை மாணவர்கள் கற்றுக் கொள்ள முடியும் என்று தான் நான் கூறினேன். ஆனால், ஹிந்தியை பற்றி கூறுகிறேன் என்று தமிழகத்தில் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள், சமூக வலைதளத்தில், பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். நான் ஒரு தமிழச்சி; வேறு மாநிலத்திற்கு பணி நிமித்தமாகத் தான் சென்றுள்ளேன். தமிழகத்தில் ஒரு பிரச்னை என்றால், அதை பேசுவதற்கு, எனக்கு முழு உரிமை உண்டு. என் பெயரில் மட்டுமல்ல, உயிரிலும் தமிழ் உள்ளது. என்னை எதிர்த்துப் பேசுபவர்கள், முழுமையாக தமிழில் பேச முடியுமா? கம்பரையும் போற்ற வேண்டும்; திருவள்ளுவரையும் போற்ற வேண்டும்.
புதுச்சேரியில், துணைநிலை கவர்னரும், முதல்வரும் இணைந்து பணியாற்றி வருவது, முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு கோபத்தை ஏற்படுத்தி வருகிறது. எனக்கும், முதல்வருக்கும் எந்த விதமான ‘ஈகோ’ பிரச்னையும் கிடையாது. அரசியல் அமைப்பில் கவர்னருக்கு, வேந்தர் என்ற பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதை அரசியலாக்கக் கூடாது. பட்டமளிப்பு விழாவையே அரசியலாக்குகின்றனர். மாணவர்களுக்கு நல்லதை விதையுங்கள். இவ்வாறு தமிழிசை கூறினார்.
புதுக்கோட்டையில் கம்பன் கழகம் சார்பில் 47வது கம்பன் திருவிழா கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்தது. இதன் நிறைவு நாளான இன்று தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
எங்கெல்லாம் கலாச்சாரமும், இறை வணக்கமும், கலாச்சார படியான பழக்க வழக்கங்களும் இல்லையோ அங்கெல்லாம் பிரச்சனைகள் உருவாகும் என்பதைதான் கம்பன் எடுத்துரைக்கிறார். நாம் நண்பர்களால் உயரப் போவதில்லை, எதிரிகளால்தான் நாம் உயர போகிறோம். மீம்ஸ் போடுவதை நீங்கள் பெருமையாக கருதுகிறீர்கள், நான் வெட்கமாக கருதுகிறேன். மேலும் கம்பர், இன்னொரு மொழியை கற்றுக் கொண்டு, அதில் தேர்ச்சி பெற்று, அதில் உள்ள நல்லவற்றை எடுத்து, தமிழை மக்களுக்கு கொடுத்தார் அதுதான் மொழிப்பற்று. கம்பர், வடமொழியை கற்கவில்லை என்றால் எப்படி கம்பராமாயணம் கிடைத்திருக்கும். 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பாடல் எப்படி கிடைத்திருக்கும்.
ஆனால் இங்கே இன்னொரு மொழியை கற்றுக்கொள் என்றாலே பாய்ந்து, பாய்ந்து தாக்குகிறார்கள். தேசிய கல்விக் கொள்கை தாய்மொழியைதான் ஊக்கப்படுத்துகிறது. தாய் மொழியில் தான் கல்வி கற்க வேண்டும் என்று சொல்கிறது. ஆனால் இன்னொரு மொழியையும் கற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு கம்பனே உதாரணம். மேலும் இன்னொரு மொழியை கற்பதால் தமிழ் வளர்ந்தது. ஆனால் இங்கே தமிழிசை ஹிந்திசையா என்று கேட்கின்றனர். நான் பேசும் அளவுக்கு தமிழை பேச முடியாதவர்கள் கூட வேற்று மொழியை கற்பதற்கு யோசிக்கிறார்கள். எட்டு வயது வரை பல மொழிகளை கற்றுக் கொள்ளும் அளவிற்கு மூளை செயல்பாடு உள்ளது. குறுகிய வட்டத்திற்குள் அனைத்தையுமே அரசியல் ஆக்கி விடாதீர்கள். புதுக்கோட்டையில் மட்டும் நடைபெறும் கம்பனுக்கு இவ்வளவு புகழ் என்றால், உலகம் முழுவதும் எடுத்துரைத்தால் தமிழ் இவ்வுலகையாளும். இவ்வாறு அவர் கூறினார்.