உதயநிதிக்கு முடிசூட்ட காத்திருக்கிறார் ஸ்டாலின்: சீமான்!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு முடிசூட்ட காத்திருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

திருநெல்வேலியில் பாளையங்கோட்டையில் தமிழ் தேச தன்னுரிமை கட்சியின் தமிழக மக்கள் தன்னாட்சி மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். அதில் பேசிய சீமான், மத்திய, மாநில அரசுகள் மட்டுமல்லாது அதிமுகவையும் கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது:-

தமிழ்நாட்டிற்கு சுமார் ரூ. 6 லட்சம் கோடி கடன் உள்ளது. ஆனால் ரூ. 80 கோடியில் கடலில் கருணாநிதி நினைவிடம் அருகே பேனா நினைவுச் சின்னம் வைக்க திட்டம் போடுகிறார்கள். இலங்கையில் அதிகாரமும் இல்லை, அரசும் இல்லை. இந்த நிலையிலும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தை வெளியே இருந்து வந்தவர்களே ஆட்சி செய்கிறார்கள். இந்த மண்ணை சேர்ந்த 2 பேர் அடிமையாகி இருக்கிறார்கள்.

காமராஜர் பல்லாயிரம் படிப்பகங்களை திறந்து படிக்க வைத்தார். திராவிட மாடல் ஆட்சி பல்லாயிரம் குடிப்பகங்களை திறந்து குடிக்க வைக்கிறது. நீரை தேக்கிவைக்க பல வழிகள் இருந்தும் அதனை செய்யாமல் 50 ஆயிரம் கோடி செலவு செய்து கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை அமைக்க இருக்கிறார்கள். ஓடி வரும் நதியில் நமக்கு தேவையான நீரை சேமிக்கும் நிலை என்று உருவாகிறதோ அன்று தான் நாடு உருப்படும்.

மின்சாரம் உற்பத்தி செய்யும் அதானி வளம் பெறவேண்டும் என்ற நோக்கில் தான் மின்சாரக் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு வற்புறுத்துகிறது. நிலக்கரியை தனியாரிடம் வாங்க மத்திய அரசு வற்புறுத்தி வருகிறது என சந்திரசேகர ராவ் சொல்கிறார். யார் அந்த தனியார் என்று பார்த்தால் அதானி.

ஆர்எஸ்எஸ் அமைப்பு சுதந்திர போராட்டத்திற்காக செய்தது என்ன என்பது குறித்து வெளிப்படையாக பேச வேண்டும். வெள்ளைக்கார ராணிகள் வரும்போது குச்சி வைத்து அணிவகுப்பு மரியாதை செய்தவர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பினர். காஷ்மீர் இஸ்லாமியர்களை இந்திய நாட்டில் சேர சொல்பவர்கள், இங்குள்ள இஸ்லாமியர்களை வெளிநாட்டிற்கு செல்ல சொல்கிறார்கள். அரசியல் கொள்கை என்பதே இல்லாத கட்சி பாஜக.

எல்லோருக்குமான அரசு என்பது இந்தியாவில் இல்லை. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரது மகனுக்கு முடிசூட்ட காத்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமி கட்சி ஆரம்பித்தால் அவரது மகன், மனைவி கூட சேர்ந்திருக்க மாட்டார்கள். இந்தியா இரண்டாக பிரிக்கும் நிலை விரைவில் உருவாகும். திராவிட நாடு என இவர்கள் சொல்வதற்கு பதில், தென் இந்தியா என சொல்லிருக்கலாம். அனைத்து சட்டங்களையும் நாட்டில் நாடாளுமன்றத்தில் விவாதம் செய்து கொண்டு வருவதல்ல. அனைத்தும் நீதிமன்றத்தின் உத்தரவில் தான் அமலுக்கு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.