நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு இன்று பதவியேற்றார்.
ஜனாதிபதி தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு 64 சதவீத வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார். இதையடுத்து புதிய ஜனாதிபதி பதவியேற்பு விழா இன்று பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவுக்காக பாராளுமன்ற மைய மண்டபம் விழாக்கோலம் பூண்டுள்ளது. பதவியேற்புக்கு முன்னதாக, மகாத்மா காந்தி நினைவிடத்தில் திரவுபதி முர்மு மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் ஜனாதிபதி மாளிகைக்கு சென்றார். ஜனாதிபதி பதவியை நிறைவு செய்துள்ள ராம்நாத் கோவிந்த், திரவுபதி முர்முவை வரவேற்றார். அதன்பின்னர் திரவுபதி முர்முவும், ராம்நாத் கோவிந்தும் ஜனாதிபதி மாளிகையில் இருந்து பாராளுமன்றத்துக்கு வந்தனர். பாராளுமன்ற மைய மண்டபத்தில் காலை 10 மணி அளவில் விழா தொடங்கியது. நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதைத்தொடர்ந்து திரவுபதி முர்மு பதவி ஏற்பு உரை ஆற்றினார். விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய மந்திரிகள், கவர்னர்கள், முதல்-மந்திரிகள், முப்படை தளபதிகள், பல்வேறு நாடுகளின் தூதர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பதவியேற்ற பிறகு பாராளுமன்ற மைய மண்டபத்தில் அவர் தனது முதல் உரையை ஆற்றினார். அப்போது திரவுபதி முர்மு பேசியதாவது:-
ஜனாதிபதியாக பதவியேற்றது பெருமை அளிக்கிறது. என்னை தேர்ந்து எடுத்த எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். நாட்டின் முதல் பழங்குடியின ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. முக்கியமான தருணத்தில் நாடு என்னை ஜனாதிபதியாக தேர்ந்து எடுத்துள்ளது. இன்று முதல் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. நாடு சுதந்திரம் அடைந்து 50-வது ஆண்டை கொண்டாடும்போது எனது அரசியல் வாழ்க்கை தொடங்கியது என்பது தற்செயல் நிகழ்வாகும். சுதந்திரத்தின் 75-வது ஆண்டில் இன்று எனக்கு இந்தப் புதிய பொறுப்பு கிடைத்துள்ளது. அடுத்த 25 ஆண்டுக்கான தொலைநோக்கு திட்டம் தயாராகும் நேரத்தில் சேவையாற்ற வாய்ப்பு கிடைத்தது பாக்கியம்.
சாதாரண கவுன்சிலராக தொடங்கி ஜனாதிபதியாக உயர்ந்தது ஜனநாயகத்தின் தாயகமான இந்தியாவின் மகத்துவமாகும். ஏழை வீட்டில் பிறந்த மகளான நான் ஜனாதிபதி ஆக முடியும் என்பதுதான் ஜனநாயகத்தின் சக்தியாகும். ஜனாதிபதி பதவியை எட்டியது என்பது எனது தனிப்பட்ட சாதனை அல்ல. இது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஏழையின் சாதனை ஆகும். என்னுடைய உயர்வு கோடிக்கணக்கான பெண்களின் கனவுகளுக்கான திறவுகோலாக இருக்கும். நாட்டு மக்களின் வளமான எதிர்காலத்துக்காக பணியாற்றுவேன். பெண்கள், இளைஞர்களின் நலனில் தனி கவனம் செலுத்துவேன்.
சுதந்திர போராட்ட வீரர்கள் நாட்டின் சுய மரியாதையை முதன்மையாக வைத்திருக்க கற்றுக் கொடுத்திருக்கின்றனர். சுதந்திர போராட்டத்தில் பழங்குடியின மக்கள் முக்கிய பங்காற்றி உள்ளனர். கொரோனா காலத்தில் உலகத்துக்கே இந்தியா பெரும் நம்பிக்கையாக திகழ்ந்தது. அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைத்து பாரதத்தை கட்டியெழுப்ப முனைப்புடன் செயல்படுவோம். பன்முக தன்மை கொண்ட நமது நாட்டில் பல மொழிகள், பல மதங்கள், பல உணர்வு, பழக்க வழக்கங்கள் உள்ளன. பெண்கள் மேலும் மேலும் அதிக அதிகாரத்தை பெற வேண்டுமென விரும்புகிறேன். ஒவ்வொரு துறையிலும் பெண்களுடைய பங்களிப்பை அதிகரிக்க வேண்டும். பல ஆண்டுகளாக முன்னேற்றம் காணாத பிற்படுத்தப்பட்டோர், ஏழைகள் என்னை அவர்களது பிரதிபலிப்பாக பார்க்கலாம்.
நாட்டின் முதல் ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத் முதல் ராம்நாத் கோவிந்த் வரை பல பிரமுகர்கள் இந்த பதவியை அலங்கரித்துள்ளனர். இந்த பதவியுடன் பெரிய பாரம்பரியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பொறுப்பையும் நாடு என்னிடம் ஒப்படைத்துள்ளது. அரசியலமைப்பின் வெளிச்சத்தில் எனது கடமைகளை மிகுந்த நேர்மையுடன் நிறைவேற்றுவேன். சில நாட்களுக்கு முன்பு இந்தியா 200 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்தி சாதனை படைத்துள்ளது. இந்த முழுப் போரிலும் இந்திய மக்கள் காட்டிய கட்டுப்பாடு, தைரியம் மற்றும் ஒத்துழைப்பு இதற்கு காரணமாகும்.
கல்வி பற்றிய ஸ்ரீஅரவிந்தரின் கருத்துக்கள் என்னை தொடர்ந்து ஊக்குவிக்கின்றன. இளைஞர்களின் உற்சாகத்தையும், தன்னம்பிக்கையையும் நான் உன்னிப்பாக கவனித்து வருகிறேன். எதிர்காலத்தை உருவாக்குவது மட்டுமல்ல எதிர்கால இந்தியாவுக்கு அடித்தளமிடுகிறீர்கள் என்பதை நம் நாட்டு இளைஞர்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன். ஜனாதிபதி என்ற வகையில் உங்களது முழு ஒத்துழைப்பு எனக்கு எப்போதும் உண்டு. என் வாழ்க்கையில் இதுவரை பொது சேவையில் வாழ்க்கையின் அர்த்தத்தை அனுபவித்து வருகிறேன். உலக நலன் என்ற உணர்வோடு உங்கள் அனைவரின் நம்பிக்கைக்கு ஏற்ப அர்ப்பணிப்புடன் பணியாற்ற நான் எப்போதும் தயாராக இருப்பேன். இவ்வாறு ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசினார்.