ஆராய்ச்சி படிப்பு மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பெரியார் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் கோபி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மைக் காலமாக சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் அதிகளவில் சர்ச்சைகள் ஏற்பட்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன், பல்கலைக்கழக பேராசிரியர்கள் நியமனங்களில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத்தொடர்ந்து முதுநிலை பட்டப்படிப்பு வினாத்தாளில், சாதி குறித்து கேட்கப்பட்ட ஒரு கேள்வி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பதிவாளராக பேராசிரியர் கோபி புதிதாக நியமனம் செய்யப்பட்டார். இதனால் அவர், பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர் ஆராய்ச்சி படிப்பு பயிலும் மாணவி ஒருவருக்கு வகுப்பு எடுத்து வருகிறார். அந்த வகையில், விடுமுறைத் தினமான நேற்று முன்தினம் மாணவியைப் பல்கலைக்கழகத்துக்கு வருமாறு அழைத்துள்ளார். அதைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்துக்கு மாணவி வந்த சில மணி நேரத்திலேயே மீண்டும் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கு என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாத சூழலில், பெரியார் பல்கலைக் கழகத்தின் பதிவாளர் கோபி தன்னை ஒரு பெண் அடியாட்களுடன் தாக்கியதாகக் கூறி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்திருக்கிறார். இது தொடர்பான கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதேநேரம், சம்மந்தப்பட்ட மாணவி தரப்பில் இருந்தும், அதே காவல் நிலையத்திற்கு புகார் வந்துள்ளது. மாணவியின் மனுவில், ஆராய்ச்சி வகுப்பிற்காக சென்ற தன்னிடம் பல்கலைக்கழகப் பதிவாளர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக, கருப்பூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில், பெரியார் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளர் கோபி அளித்திருந்த புகார் பொய்யானது என்பதும், மாணவியிடம் கோபி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருந்தது உறுதியானது என்பது காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, கோபி மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் கருப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில், அவரை நேற்று மாலை கைது செய்தனர்.