மேக்கேதாட்டு அணை: வழக்கை ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்!

மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பான வழக்கை ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜர் ஆகாததால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

மேக்கேதாட்டு பகுதியில் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசால் முன்மொழியப்பட்டுள்ள அணை கட்டுமானத் திட்ட அறிக்கை குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விவாதிப்பதற்கு தடை விதிக்கக் கோரி தமிழக அரசின் தரப்பில் தாக்கலான மனுவுக்கு பதில் அளிக்க ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் ஜூலை 20 ஆம் தேதிக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூலை 26-ஆம் தேதிக்கு பட்டியலிட்டது.

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டும் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ஏற்கெனவே மனு தாக்கல் செய்திருந்தது. இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கடந்த ஜூன் 7-ஆம் தேதி ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தது. அதில், இந்த விவகாரம் நீதிமன்றத்தின் விசாரணையில் நிலுவையில் உள்ளதால், இதுகுறித்து ஆணையம் விவாதிக்க முடியாது. ஆகவே, இதுகுறித்து விவாதிக்க ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழக அரசு எழுப்பிய பிரச்னைகளையொட்டி, ஜூன் 17-இல் கூட்டப்பட்ட காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16-ஆவது கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பான வழக்கை ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.