மாணவிகள் மர்ம மரணம்: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும்: விஜயகாந்த்!

பள்ளி மாணவிகளின் மர்ம மரண வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டாலும், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்றை அமைக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மாணவி ஸ்ரீமதியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மண்ணின் ஈரம் கூட இன்னும் காயாத நிலையில் திருவள்ளூரில் மற்றொரு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கி உள்ளது. மாணவி ஸ்ரீமதி மரணத்தைத் தொடர்ந்து சேலத்தில் அரசுப் பள்ளி மாணவி 2-வது மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவமும், திருப்பூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவமும், செங்கல்பட்டில் பள்ளி மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரியில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி சரளா தூக்கிட்ட நிலையில் சடலமாக போலீசாரால் கண்டெடுக்கப்பட்டார். அந்த மாணவி காலையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில் அந்த தகவலை பள்ளி நிர்வாகம் பெற்றோருக்கு மிகவும் தாமதமாக தெரிவித்ததாகக் சொல்லப்படும் தகவல் மிகவும் கண்டிக்கத்தக்கது. மேலும் மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி பெற்றோரும் உறவினர்களும் புகார் தெரிவித்துள்ளனர்.

மாணவி ஸ்ரீமதி மரணத்தில் உள்ள மர்மம் விலகுவதற்கு முன்பே மற்றொரு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது தமிழக மக்களை மேலும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. உளவுத்துறையின் மெத்தனப் போக்காலும் மாணவி ஸ்ரீமதி வழக்கில் காவல்துறை மிகவும் கவனக்குறைவாக செயல்பட்டதாலும் கள்ளக்குறிச்சியில் வன்முறை வெடித்தது. இதுபோன்ற ஒரு சம்பவம் இனிமேல் நடைபெறாமல் தடுக்க வேண்டியது உளவுத்துறை மற்றும் காவல்துறையின் கடமை. எனவே தற்போது மர்மமான முறையில் உயிரிழந்துள்ள மாணவி சரளாவின் மரணம் குறித்து நேர்மையான முறையில் விசாரணை நடத்தப்பட்டு உண்மை கண்டறியப்பட வேண்டும். இது சந்தேக மரணம் என காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளதால், இந்த வழக்கை தீர விசாரித்து குற்றவாளிகளை அடையாளம் காண வேண்டும். மேலும் மகளை இழந்து தவிக்கும் பெற்றோருக்கு உரிய நீதி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்கொலை முடிவு எதற்கும் தீர்வாகாது என்பதை மாணவ, மாணவிகள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். எந்த பிரச்சனையாக இருந்தாலும் மாணவர்கள் அதனை மனதில் வைத்து பூட்டி கொள்ளாமல் பெற்றோரிடமோ, ஆசிரியரிடமோ மனம் விட்டு சொல்லுங்கள். அப்போதுதான் அதற்கு உரிய தீர்வு காண முடியும். தற்கொலை செய்து கொள்ளும் எண்ணமும் உங்களை விட்டு நீங்கும். நாட்டின் எதிர்கால தூண்களான மாணவ மாணவிகள் படிப்பில் கவனம் செலுத்தி வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும். மனதை உறுதியோடு வைத்துக்கொண்டு சவால்களை எதிர்கொள்ள வேண்டும். மேலும் பள்ளி மாணவிகளின் மர்ம மரண வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டாலும், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்றை அமைக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.