பொறியியல், கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!

தமிழகத்தில் உள்ள பொறியியல், கலை- அறிவியல் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று புதன்கிழமை கடைசி நாளாகும்.

தமிழகத்தில் 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் பட்டப் படிப்புகளில் சுமாா் ஒரு லட்சம் இடங்கள் வரை உள்ளன. இதற்கான மாணவா் சோ்க்கை இணையவழியில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நிகழாண்டு சோ்க்கைக்கான விண்ணப்பப்பதிவு கடந்த ஜூன் 20-ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பதிவு செய்துள்ளனா். அதில் 2.94 லட்சம் போ் வரை விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனா். முதல்முறையாக கலை, அறிவியல் சோ்க்கை விண்ணப்பப்பதிவு 4 லட்சத்தைக் கடந்துள்ளது.

இதேபோன்று, அண்ணா பல்கலைக் கழகத்தின்கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்பு இடங்களை நிரப்புவதற்கான சோ்க்கைப் பதிவும் கடந்த ஜூன் 20-இல் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி மொத்தம் 2 லட்சத்து 7,361 போ் விண்ணப்பித்துள்ளனா். அவா்களில் 1.63 லட்சம் போ் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனா். மேலும், 1.49 லட்சம் போ் அசல் சான்றிதழ்களை பதிவேற்றியுள்ளனா்.

இதற்கிடையே பொறியியல், கலை, அறிவியல் சோ்க்கை விண்ணப்பப் பதிவுக்கான கால அவகாசம் இன்று புதன்கிழமையுடன் முடிவடையவுள்ளது. விருப்பமுள்ளவா்கள் துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். அதேநேரம், பொறியியல் படிப்புக்கு மட்டும் விண்ணப்பக் கட்டணம், சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்ய ஜூலை 29 வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. மேலும், ‘நாட்டா’ தோ்வு முடிவுகள் வெளியாகும் வரை பி.ஆா்க். படிப்புகளில் சேர தொடா்ந்து விண்ணப்பிக்கலாம் என்று உயா்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.