தூத்துக்குடி சுங்கச்சாவடி பராமரிப்பு இல்லாததால் ரூ.400 கோடி அபராதம்!

தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடிக்கு பராமரிப்பு சரியில்லை என‌ தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ 400 கோடி அபராதம் வித்தித்துள்ளது.

தூத்துக்குடி புதூர் பாண்டியராஜபுரம் சுங்கச்சாவடிக்கு ரூ.400 கோடி அபராதம் விதித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டது. சுங்கச்சாவடியில் வாகன ஓட்டிகளுக்கு எந்த அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை என குற்றம்சாட்டப்பட்டது. சென்டர் மீடியம் அமைக்காமல், சாலையை சரிவர பராமரிக்காததால் ரூ.400 கோடி அபராதம் விதித்தது.

ஆந்திர மாநில தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானது இந்த சுங்கச்சாவடி. இந்த சுங்கச் சாவடியை கடக்கும் வாகனங்களிடம் இருந்து கட்டணம் பெறப்படுகிறது. எனினும் சாலைகளை பராமரிக்கப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த ஆண்டு இந்த சுங்கச்சாவடிக்குள்பட்ட நெடுஞ்சாலையை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்நிலையில், தூத்துக்குடி மதுரை நான்குவழிச் சாலையில் விளக்குகள் பொருத்தாது, எதிரே வரும் வாகங்கள் கண் கூசாமல் இருக்க சாலையின் நடுவே செடிகள் வைக்காமல் இருப்பது, இருப்பக்க எல்லையை குறிக்கும் வண்ணக்கோடுகள், பாதசாரிகள் வாகனங்களை நிறுத்துவதற்கான இடம், கழிப்பறை வசதிகள், இணைப்புச்சாலை குறியீடு, பல இடங்களில் பேருந்து நிறுத்தம் இல்லாதது, சிப்காட் அருகே ரயில்வே மேம்பாலம் போடப்படாததை அதிகாரிகள் கண்டு பிடித்தனர். இதையடுத்து அரசின் உத்தரவை பின்பற்ற தவறியதாக அந்நிறுவனத்துக்கு சுமார் 400 கோடி ரூபாயை அபராதம் விதித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.