ஜம்மு காஷ்மீா் கிரிக்கெட் சங்க முறைகேடு வழக்கில் தொடா்புடைய பணப் பரிவா்த்தனை மோசடி புகாரில் ஜம்மு காஷ்மீா் முன்னாள் முதல்வா் பரூக் அப்துல்லா மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யதுள்ளது.
அவரைத் தவிர, ஜம்மு காஷ்மீா் கிரிக்கெட் சங்கத்தின் மூன்னாள் பொருளாளா்கள் ஹசன் அகமது மிா்ஸா, மிா் மன்சூா் கசான்பா் ஆகியோரின் பெயா்களும் குற்றப்பத்திரிகையில் சோ்க்கப்பட்டுள்ளது. இவா்கள் அனைவரும் ஆகஸ்ட் 27-ஆம் தேதி ஆஜராகவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் மிா்ஸாவை 2019-இல் அமலாக்கத் துறை கைது செய்தும், அப்துல்லாவிடம் பல முறை விசாரணையும் நடத்தி உள்ளது. பரூக் அப்துல்லா உள்ளிட்டவா்களின் ரூ.21.55 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியும் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜம்மு காஷ்மீா் கிரிக்கெட் சங்கத்துக்கு சொந்தமான நிதியை சொந்த வங்கிக் கணக்குகளுக்கு மாற்றம் செய்து பயன்படுத்தப்பட்டதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது.
2018-இல் சிபிஐ முதலில் வழக்குப் பதிவு செய்தது. அதில், ஜம்மு காஷ்மீா் கிரிக்கெட் சங்கத்தின் ரூ.43.69 கோடி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டியிருந்தது. இதையடுத்து, பணப் பரிவா்த்தனை மோசடி வழக்கைப் பதிவு செய்த அமலாக்கத் துறை, ரூ.94.06 கோடியை பிசிசிஐயிடம் இருந்து 2005 முதல் 2012 வரையில் ஜம்மு காஷ்மீா் கிரிக்கெட் சங்கம் மூன்று வங்கிக் கணக்கில் பெற்ாகவும், அந்தப் பணம் பல்வேறு புதிய வங்கிக் கணக்குகள் தொடங்கி பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும் குற்றம்சாட்டியது.