ஆள் கடத்தல் கும்பலுடன் தி.மு.க.,வினருக்கு தொடர்பு: அண்ணாமலை

கோவையில் காப்பகம் என்ற பெயரில், ஆட்களை வலுக்கட்டாயமாக அடைத்து வைத்த சம்பவத்தில், தி.மு.க.,வினருக்கு உள்ள தொடர்பு குறித்து, போலீசார் விசாரிக்க வேண்டும் என, பா.ஜ., தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

அரசின் கவனக்குறைவால், தமிழகத்தில் தினமும் குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள், பள்ளி, கல்லுாரிகளில் நடக்கும் தற்கொலைகள், லாக்-அப் மரணங்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவது, தி.மு.க., அரசின் மெத்தனப்போக்கையும் திறனற்ற தன்மையையும் வெளிப்படுத்துகிறது.

கோவை, தொண்டாமுத்துார் அடுத்த அட்டுக்கல் கிராமத்தில், மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதி இன்றி செயல்பட்டு வந்த ஒரு கிறிஸ்தவ தேவாலயம் அரசு அதிகாரிகளால், நான்கு ஆண்டுகளுக்கு முன் ‘சீல்’ வைக்கப்பட்டது. தி.முக., ஆட்சிக்கு வந்ததும், தொண்டாமுத்துார் தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் ரவி உதவியுடன், அந்த தேவாலயம் புனரமைக்கப்பட்டு, சமீபத்தில் அவரது தலைமையில் திறப்பு விழா நடந்துள்ளது. ‘கருணை பயணம்’ என்ற காப்பகத்தில் ஆதரவற்ற, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் தருவதாகவும், ஜேக்கப், சைமன், ஜெபின், செந்தில்குமார் ஆகிய நால்வர், இதை நடத்துவதாகவும் கூறப்படுகிறது.

இந்த காப்பகத்தில், 200க்கும் மேற்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் இந்த அமைப்பினர், சாலையில் நடந்து சென்ற முதியோர்களை வழிமறித்து, வற்புறுத்தி காப்பக வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளனர். இதைக் கண்ட பா.ஜ., தொண்டர்கள், மாவட்ட தலைவர் உத்தம ராமசாமிக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். காவல்துறை உதவியோடு, அந்த வாகனத்தை இடைமறித்து, அழைத்துச் செல்லப்பட்டவர்கள் விசாரிக்கப்பட்டனர். அவர்கள் யாரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல என்றும், வற்புறுத்தி அழைத்துச் சென்று, அவர்களின் ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளை தீயிட்டு எரித்ததும் தெரியவந்தது. கேள்வி கேட்டவர்களை துன்புறுத்தியுள்ளனர்.

பா.ஜ., தலையிடுவதை அறிந்ததும், 92 பேரை வாகனத்தில் கொண்டு சென்று, கோவையின் பல பகுதிகளில் விடுவித்துள்ளனர். இந்த மோசடிக்கும்பலுக்கும் தி.மு.க.,வுக்கும் உள்ள தொடர்பை, போலீசார் விசாரிக்க வேண்டும். உடல் உறுப்புகளை கடத்தி விற்கும் கும்பலுக்கும், இவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என, விசாரிக்க வேண்டும். அனுமதியின்றி செயல்படும் இதுபோன்ற காப்பகங்களை ஒழுங்குபடுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாஸ்போர்ட் மோசடி சம்பவம் நிகழ்ந்த காலத்தில் மதுரையின் காவல் ஆணையராக இருந்த டேவிட்சன் ஆசீர்வாதம் குற்றமற்றவர் எனவும், பாஜகவின் அண்ணாமலையை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறியுள்ளார்.

சுரேஷ் குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், “2013ஆம் ஆண்டு பெறப்பட்ட எனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க விண்ணப்பித்த போது காவல்துறையினர் என் மீது குற்ற வழக்கு இருப்பதாக தெரிவித்தனர். மேலும், நசுருதீன் என்பவர் மீதான வழக்கில் எனக்கும் தொடர்பு இருப்பதாக கருதப்பட்டு இதுபோல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நசுருதீன் என்பவர் எனது பயண ஏஜென்ட் மட்டுமே அவருக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஆகவே எனது பாஸ்போர்ட்டை புதுப்பித்து வழங்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மனுதாரர் மீது எவ்வித குற்றமும் இல்லை என ஒரு கியூ பிரிவு காவல்துறையினர் மனுதாரருக்கு பாஸ்போர்ட் வழங்க எவ்வித ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை. மனுதாரருக்கான நிவாரணம் வழங்கப்பட்டாலும், 2019ஆம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த சிலரும், இந்தியாவைச் சேர்ந்த சிலரும் போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட்டுகள் பெற்ற வழக்கு தொடர்பாக அறிக்கை கேட்கப்பட்டது.

இது தொடர்பாக கியூ பிரிவினர் தரப்பில் காவல்துறை அலுவலர்கள் பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி உட்பட 41 பேருக்கு தொடர்பு இருப்பதாகவும் வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தேசத்தின் பாதுகாப்பு தொடர்பானது இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம் கியூ பிரிவு காவல்துறையினர் 3 மாதங்களில் வழக்கை விசாரித்து முடிக்க உத்தரவிட்டது. அதன் பின்னர் ஆறு மாதங்கள் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டது. இருப்பினும் தற்போது வரை இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.

இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர் மீது குற்றமில்லை என்பது உறுதி ஆனதால் அவரது பாஸ்போர்ட்டை புதுப்பித்து வழங்க உத்தரவிடப்படுகிறது. அதேசமயம் பாஸ்போர்ட் மோசடியில் நோடல் அலுவலர் வரை உள்ள அலுவலர்களுக்கு மட்டுமே தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது. ஆகவே, சம்பவம் நிகழ்ந்த காலத்தில் மதுரையின் காவல் ஆணையராக இருந்த டேவிட்சன் ஆசீர்வாதம் குற்றமற்றவர். அதோடு இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் பேசிய பாஜகவின் அண்ணாமலையை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது. அவர் இல்லையெனில் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்காது எனக் கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.