மேற்கு வங்கத்தில் அா்பிதா முகா்ஜி வீட்டில் மேலும் பணம் பறிமுதல்!

ஆசிரியர் பணி நியமனம் மோசடி தொடர்பாக மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அவரது உதவியாளர் அர்பிதா முகர்ஜி ஆகியோர் வீடுகளில் சோதனை மேற்கொண்ட போது ஏற்கனவே 20 கோடி பணம் கைப்பற்றப்பட்ட நிலையில் தற்போது மேலும் 28 கோடி கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு வங்கத்தில், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசில் தொழில் துறை அமைச்சராக உள்ள பாா்த்தா சட்டா்ஜி முன்பு கல்வி அமைச்சராக இருந்தபோது ஆசிரியா் பணி நியமனம் தொடா்பாக முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடா்பாக அமலாக்கத் துறையினா் கடந்த ஜூலை 22-இல் அா்பிதா முகா்ஜியின் அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடத்தினா். இதில் ஏராளமான நகைகளையும், ரூ.20 கோடி ரொக்கத்தையும் அமலாக்கத் துறை அதிகாரிகள் கைப்பற்றினா். இதுதொடா்பாக பாா்த்தா சட்டா்ஜியும் அா்பிதா முகா்ஜியும் 23-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா். இதனிடையே உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பார்த்தா சாட்டர்ஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இருவரையும் 14 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை கொல்கத்தா நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தது. அதனை விசாரித்த நீதிமன்றம், பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அர்பிதா முகர்ஜி ஆகியோரை வருகிற ஆகஸ்ட் 3- ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்தது.

இதனிடையே தற்போது, சோதனையில் மேலும் 28 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று மதியம் முதல் கைப்பற்றப்பட்ட பணத்தை எண்ணும் பணியை அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடங்கிய நிலையில், 3 பெரிய எண்ணும் இயந்திரங்கள் மூலம் எண்ணப்பட்ட நிலையில் 20 கோடி இதுவரை கணக்கிடப்பட்டுள்ளது. பணி தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், அர்பிதாவின் தெற்கு கொல்கத்தா வீட்டில் மீட்கப்பட்ட 22 கோடி பணத்தை விட இது அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது கொண்டுவரப்பட்டுள்ள பணம் எண்ணும் இயந்திரங்கள் பொதுவாக வங்கிகளில் பெரும் அளவில் டெபாசிட் செய்யப்படும் ரூபாய் நோட்டுகளை எண்ணுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு நிமிடத்திற்கு 4 ஆயிரம் நோட்டுகள் வரை இதில் எண்ணலாம். 2000 ரூபாய் நோட்டுகளை எண்ணினால் நிமிடத்திற்கு 8 லட்சம் ரூபாய் வரை எண்ணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே இரவில் எண்ணும் பணி முடிவடைந்து விடும் என அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ள நிலையில், கைப்பற்றப்பட்ட பணத்தை எண்ணும் பணி முடிவடைந்தவுடன் பணத்தை எடுத்துச் செல்ல லாரிகள் வந்துள்ளன. மேலும் அந்த பணத்தை பாதுகாப்பாக எடுத்துச் செல்ல 20 டிரங்க் பெட்டிகளும் வரவழைக்கப்பட்டுள்ளன. இதுவரை 41 கோடி பணம் கணக்கிடப்பட்டுள்ளதாகவும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.