இந்தியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டேவுடன் மாலத்தீவு தலைமைத் தளபதி அப்துல்லா ஷமால் டெல்லியில் வியாழக்கிழமை சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
இது குறித்து இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள டுவிட்டா் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டேயை மாலத்தீவு ராணுவ தலைமைத் தளபதி அப்துல்லா ஷமால் நேற்று வியாழக்கிழமை சந்தித்தாா். இரு தரப்பு ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து அவா்கள் ஆலோசனை நடத்தினா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள மாலத்தீவு, இந்தியாவுடன் நீண்ட காலமாகப் பாதுகாப்பு நல்லுறவைப் பேணி வருகிறது. அந்த உறவை மேம்படுத்துவதற்காக கடந்த சில ஆண்டுகளாக இரு நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கடந்த மாா்ச் மாதம் மாலத்தீவுக்குச் சென்ற வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், கரையோர ரேடாா் கருவியை அந்நாட்டு ராணுவத்துக்கு அளித்தாா்.
அதன் தொடா்ச்சியாக, இந்திய கடற்படையின் தலைமைத் தளபதி அட்மிரல் ஆா்.ஹரிகுமாா் கடந்த மாா்ச் மாதம் மாலத்தீவு சென்று அந்த நாட்டு அதிபா் இப்ராஹிம் முகமது சோலி உள்ளிட்ட தலைவா்களைச் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இந்த நிலையில், மாலத்தீவு ராணுவ தலைமைத் தளபதி 6 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளாா்.