ஜாக்குலின் பெர்னாண்டஸ் வெளிநாடு செல்ல டெல்லி நீதிமன்றம் அனுமதி!

லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில். நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் வெளிநாடு செல்ல அனுமதி அளித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தருவதாக கூறிய புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர், ரூ.200 கோடி மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இவ்வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கும் தொடர்பு இருப்பதால், அவர்மீதும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.

இந்த நிலையில், அபுதாபியில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது வழங்கும் விழாவில் பங்கேற்க வேண்டும் என்பதால், டெல்லி நீதிமன்றத்தில் அனுமதி கோரி மனு தாக்கல் செய்தார். அப்போது நடிகையின் வக்கீல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘பாலிவுட்டில் ஜாக்குலின் மிகப்பெரிய நடிகை. அவருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதால், அவர் வெளிநாடு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே, அபுதாபியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்’ என்றார்.

இந்த மனுவின் அனைத்து வாதங்களையும் அறிந்த நீதிபதி, வரும் 31 முதல் ஜூன் 6ம் தேதி வரை ஜாக்குலின் பெர்னாண்டஸ் வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி அளிப்பதாக உத்தரவு பிறப்பித்தார். இதனால் அவர் அபுதாபி நிகழ்ச்சியில் பங்கேற்பது உறுதியாகியுள்ளது. முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் வெளிநாடு செல்ல முயன்ற ஜாக்குலின் பெர்னாண்டஸ், மும்பை சர்வதேச விமான நிலையத்தில் அமலாக்கத் துறையால் தடுத்து நிறுத்தப்பட் டார். சமீபத்தில் அவரது ரூ.7.27 கோடி மதிப்பு சொத்துகளையும் அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.