தொழிலதிபரை மிரட்டி பணம் பறித்த வழக்க்கில் நடிகை ஜாக்குலின் குற்றவாளியாக சேர்ப்பு!

தொழிலதிபரை மிரட்டி ரூ.215 கோடி பணம் பறித்த வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.

டிடிவி தினகரனுக்கு இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தருவதாக கூறி பேரம் பேசி மோசடி செய்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் கடந்த 2017-ம் ஆண்டு கைதானார். டெல்லி திகார் சிறையை தொடர்ந்து அங்குள்ள ரோகிணி சிறையில் இருக்கும்போதும் சுகேஷ் மோசடி சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். ரான்பாக்சி மருந்து நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகிகள் இருவருக்கு ஜாமீன் பெற்றுத்தருவதாக ஏமாற்றி அவர்களின் உறவினர்களிடமிருந்து ரூ.215 கோடி பறித்தார் என்பது சுகேஷ் சந்திரசேகர் மீதான வழக்காகும். பிரதமர் அலுவலகம், ஒன்றிய உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் அலுவலகத்திலிருந்து பேசுவது போன்று நடித்தும் சுகேஷ் பணம் பறித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் சுகேஷை மத்திய அமலாக்கத்துறை கைது செய்து விசாரணை நடத்தியது. அப்போது மோசடி செய்த பணத்தில் சென்னையில் கடற்கரை பங்களா, சொகுடு கார், இந்தி நடிகைகளுடன் உல்லாசமாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சுகேஷின் மனைவி உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். மோசடிக்கு துணைபோன சிறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சுகேஷ் சிறையில் இருந்தபோது அவருடன் தொடர்பில் இருந்தவர்களில் பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் முக்கியமானவர்.பரோலில் வந்த சுகேஷ், ஜாக்குலின் உடன் நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கியது உறுதியானது. அவரை காதலிப்பதாக கூறி தங்கம், வைர நகைகள் ஆகியவற்றுடன் விலை உயர்ந்த கூப்பர் கார் ஒன்றையும் பரிசளித்தார். இதை தவிர ஜாக்குலின் குடும்பத்தினருக்கும் பணத்தை வாரி வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக நடிகை ஜாக்குலின் அமலாக்கத்துறை விசாரணைக்கு பலமுறை ஆஜரானார். அப்போது கூப்பர் காரை திரும்ப ஒப்படைத்துவிட்டதாகவும், விலை உயர்ந்த கைப்பை, காலணிகள், வைர தோடுகள், தங்க பிரேஸ்லெட்டுகள் ஆகியவற்றை பரிசாக பெற்றதும் தெரியவந்தது. இதையடுத்து சுகேஷுக்கு எதிரான மோசடி வழக்கில் தற்போது நடிகை ஜாக்குலினும் சேர்க்கப்பட்டுள்ளார். டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையினர் இன்று தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் ஜாக்குலின் பெயர் இடம் பெற்றுள்ளது. மேலும் அவர் குற்றவாளிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.