மீரா மிதுனை காணவில்லை என அவரது தாயார் சியாமளா காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அனுப்பியுள்ளார்.
சாதா மாடல் இல்லை தான் ஒரு சூப்பர் மாடல் என தனக்கு தானே சொல்லிக் கொள்பவர் மீரா மிதுன். இவர் மாடலாக இருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமே பிரபலமடைந்தார். அதிலும் சினேகன் செய்யாத தப்பை செய்ததாக கூறி கூப்பாடு போட்டவர். பின்னர் கமல் குறும்படம் போட்டு காட்டினார். இந்த நிலையில் இவர் அவ்வப்போது அழுதபடியே ஏதாவது ட்வீட் போட்டு பரபரப்பை கிளப்பி வந்தார்.
இந்த நிலையில் இவர் பட்டியலினத்தவர்கள் குறித்து அண்மையில் அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ ஆதாரத்தை வைத்து மீரா மிதுன் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அவர் மீதும் அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். இதன் பிறகு அவர்கள் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணை சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு மீரா மிதுன் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் அந்த வழக்கு நீதிபதி எஸ் அல்லி முன்னிலையில் விசாரணைக்கு வந்த போதும் மீரா மிதுன் ஆஜராகவில்லை. ஆனால் அவரது நண்பர் சாம் ஆஜரானார். இந்த நிலையில் மீரா மிதுன் அவ்வப்போது தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே வருவதாகவும் அவரை கைது செய்ய முடியவில்லை என்றும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் மீராமிதுனின் செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவித்தனர். 2 வாரங்களுக்கு மேலாக பிடிவாரண்ட் நிலுவையில் உள்ள நிலையில் அவரை இதுவரை கைது செய்யாததால் சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் காவல் துறை மீது கடும் அதிருப்தியை தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை மீண்டும் கடந்த 19ஆம் தேதி வந்தது. அப்போதும் மீரா மிதுன் தலைமறைவாகவே உள்ளார். அவரது குடும்பத்தினரை தொடர்ந்து கண்காணித்து வருவதாக காவல் துறையினர் தெரிவித்தனர். இதனால் இந்த வழக்கின் அடுத்த விசாரணை அடுத்த மாதம் 16ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனது மகளும் நடிகையுமான மீரா மிதுனை காணவில்லை என அவரது தாயார் சியாமளா புகார் கொடுத்துள்ளார். சென்னை காவல் துறை அலுவலகத்தில் சியாமளா புகார் கொடுத்ததுடன் அவரை விரைவில் கண்டுபிடித்துத் தர வேண்டும் என கோரிக்கையையும் எழுப்பியுள்ளார். இதனால் மீராமிதுன் உண்மையிலேயே காணாமல் போனாரா இல்லை போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து ஸ்டன்ட் அடிக்கிறாரா என்பது தெரியவில்லை.