வெண்ணிலா கபடி குழு நடிகர் ஹரி வைரவன் திடீர் மரணம்!

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த வெண்ணிலா கபடி குழு நடிகர் ஹரி வைரவன் காலமானார்.

மதுரை மாவட்டம் கடச்சனேந்தலைச் சேர்ந்தவர் ஹரி வைரவன். தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, குள்ளநரி கூட்டம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் இடம்பெற்ற புரோட்டா காமெடியில் நடித்துள்ளார் ஹரிவைரவன். இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

சில மாதங்களுக்கு ஹரி வைரவனின் மனைவி அவரது உடல் நிலை குறித்து பேசி மருத்துவச் செலவுக்காக உதவி கேட்டிருந்தார். ஹரி வைரவன் திடீரென கோமா நிலைக்குச் சென்றுவிட்டார் என்றும் அதன் பிறகு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சைகளை தொடர்ந்து வீட்டில் இருக்கிறார் என்றும் கண்ணீர்மல்க கூறியிருந்தார். சர்க்கரை நோய், அதிக உடல் எடை போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள தனது கணவரின் மருத்துவ செலவுக்கு உதவ வேண்டும் என்னும் கோரியிருந்தார். மேலும் கண்கள் சுறுங்கி முகம், உடம்பு, கை கால்கள் வீக்கத்துடன் ஆள் அடையாளமே தெரியாமல் ஹரி வைரவன் உயிருக்கு போராடும் போட்டோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகின. ஹரி வைரவனின் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் வெண்ணிலா கபடி குழு நடிகரா இவர் என அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவருக்கு நடிகர்கள் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், ப்ளாக் பாண்டி, கார்த்திக், சரவணா உள்ளிட்ட சில நடிகர்கள் உதவி செய்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்த நிலையில் நடிகர் ஹரி வைரவன் அதிகாலை 12.15 மணிக்கு மரணமடைந்தார். மரணமடைந்த ஹரி வைரவனுக்கு மனைவியும் 2 வயதில் ஒரு மகனும் உள்ளளனர். 38 வயதே ஆன அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஹரி வைரவன் நடித்த வெண்ணிலா கபடி குழு, பாண்டிய நாடு ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் சுசீந்திரன் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பதிவிட்டிருப்பதாவது, எங்களுடைய வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் நடித்த வைரவன் இன்று காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

38 வயதான நடிகர் ஹரி வைரவனுக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு கவிதா (30) என்ற பெண்ணுடன் திருமணமானது. அவர்களுக்கு 2 வயதில் யோஷினிஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. நடிகர் ஹரிவைரவனின் ஊதியத்தை வைத்து மட்டுமே குடும்பத்தை நடத்தி வந்த அவரது மனைவி தற்போது உடைந்த ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார். தற்போது கணவரின் மறைவால் குழந்தையோடு செய்வதறியாது நிற்கிறார். தமிழ்நாடு நடிகர் சங்கம் உயிரிழந்த நடிகர் ஹரி வைரவனின் குழந்தை மற்றும் குடும்பத்தின் சூழலை உணர்ந்து அவர்களின் வாழ்வாதரத்திற்காக பொருளாதார ரீதியாக உதவிகளை செய்து தர வேண்டும் என ஹரிவைரவனின் மனைவி மற்றும் அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.

இந்நிலையில், வெண்ணிலா கபடிகுழு படத்தில் ஹரி வைரவனுடன் இணைந்து நடித்த அப்புக்குட்டி இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், வெண்ணிலா கபடிக்குழு வைரவன் இன்னைக்கு நம்மக்கூட இல்லை. எல்லாரும் ஜெயிப்போம் என்று நாங்கள் அனைவரும் நடித்த படம் வெண்ணிலா கபடிகுழு. அந்த படம் வெற்றி பெற்று அனைவரும் நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. அனைவரின் வாழ்க்கையும் மாறப்போகுதுனு நினைச்சோம். ஆனால், வைரவன் நம்மை விட்டு போனதை நினைக்கும் போது மனம் மிகவும் வேதனை அடைகிறது. குள்ளநரிக்கூட்டம் படத்திலும் நான் அவருடன் நடித்துள்ளேன், வைரவன் அனைவரிடத்திலும் அன்பாக பழகுவார். இரண்டு நாட்களுக்கு முன் கூட அவரின் மனைவியிடம் வைரவன் உடல்நிலை குறித்து கேட்டேன். நல்ல இருக்கிறார், நடக்க மட்டும்தான் முடியவில்லை என்று சொன்னாங்க. நானும் குணமடைந்து வந்துவிடுவார் என்று நினைச்சேன். ஆனால், இன்று அவர் நம்முடன் இல்லை. அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம் வேண்டுகிறேன் என நடிகர் அப்புக்குட்டி கண்கலங்கி பேசினார்.