நடிகை கீர்த்தி சுரேஷ் தனது கரியர் பீக்கில் இருக்கும்போதே தனது நீண்ட நாள் காதலரான ஆண்டனி தட்டிலை கடந்த வருடம் கோவாவில் வைத்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்தை முடித்த கையோடு ஹனிமூனுக்கு செல்வார் என்று பார்த்தால் பேபி ஜான் படத்தின் ப்ரோமோஷனில் மும்முரமாக ஈடுபட்டார். சூழல் இப்படி இருக்க அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது காதல் அனுபவம் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார்.
தயாரிப்பாளர் சுரேஷ் மற்றும் நடிகை மேனகாவுக்கு பிறந்த கீர்த்தி சுரேஷ் தமிழில் இது என்ன மாயம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அந்தப் படம் சரியாக போகவில்லை. அடுத்ததாக அவர் சிவகார்த்திகேயனுடன் நடித்த ரஜினிமுருகன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன் காரணமாக கீர்த்தி சுரேஷுக்கும் தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் கிடைத்தன. அதன்படி விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார் அவர். தமிழ், மலையாளத்தில் மட்டும் நடித்துவந்த அவர் அடுத்ததாக தெலுங்கில் மகாநடி படத்தில் நடித்தார். அந்தப் படம் பெரிய வெற்றியை பெற்று கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருதினையும் வாங்கி தந்தது. அதனையடுத்து அவருக்கு சின்ன சறுக்கல் ஏற்பட தமிழில் மாமன்னன் திரைப்படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்க மீண்டும் தமிழில் பிஸியானார் அவர்.
இதற்கிடையே கீர்த்தி சுரேஷுக்கு கடந்த வருடம் திருமணம் நடைபெற்றது. அவர் தனது நீண்ட நாள் காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை கோவாவில் வைத்து ஹிந்து முறைப்படியும், கிறிஸ்தவ முறைப்படியும் திருமணம் செய்துகொண்டார். அதில் திரையுலக நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டார்கள். ஆண்டனியை பொறுத்தவரை கொச்சி, சென்னை, துபாய் உள்ளிட்ட பல இடங்களில் வெற்றிகரமான தொழிலதிபராக வலம் வந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “நாங்கள் இரண்டு பேரும் முதன்முறையாக ஆர்குட்டில்தான் பேச ஆரம்பித்தோம். ஒரு மாதம் பேசியிருப்போம் என்று நினைக்கிறேன். பிறகு ரெஸ்டாரண்ட் ஒன்றில் முதலில் சந்தித்தோம். அப்போதும் நான் எனது குடும்பத்தினருடன் இருந்ததால் ஆண்டனியிடம் பேச முடியவில்லை. பிறகு ஒரு நாள் உனக்கு தைரியம் இருந்தால் எனக்கு புரோபோஸ் செய் என்று கூறினேன். 2010ஆம் ஆண்டு என்னிடம் அவர் காதலை சொன்னார். 2016ல் தீவிரமாக காதலிக்க ஆரம்பித்தோம். அவர் அந்த சமயத்தில் எனக்கு கொடுத்த மோதிரத்தை இன்றுவரை நான் கழற்றவில்லை. அது என்னுடைய திருமணத்திலும் இருந்தது. நாங்கள் முதலில் வீட்டை விட்டு ஓடிப்போக நினைத்தோம். நான் 12ஆவது படித்தபோது அவர் கத்தாரில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். ஆறு வருடங்கள் நாங்கள் தூரமாக இருந்தே காதலித்துவந்தோம். எங்களை ரொம்பவே நெருக்கமாக்கியது என்றால் கொரோனா காலகட்டம்தான்” என்றார்.