சமுத்திரக்கனி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள திரு மாணிக்கம் படத்தை தற்போது பாராட்டி ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்து வளர்ந்துவரும் இளம் இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்தார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்த நிலையில், அடுத்ததாக தன்னுடைய மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் என்ற கேமியோ கேரக்டரில் நடித்திருந்தார். இந்தப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் கடந்த ஆண்டிலேயே ரஜினிகாந்த்தின் வேட்டையன் படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஆயினும் கலவையான விமர்சனங்களே இந்தப் படத்திற்கு கிடைத்தது. இதனிடையே தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் 70 சதவிகிதம் நடந்து முடிந்துள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் தன்னுடைய பேட்டியொன்றில் கூறியிருந்தார். மார்ச் மாதத்திற்குள் இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடையவுள்ளதாகவும் கோடைக் கொண்டாட்டமாக படம் ரிலீசாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே அடுத்தடுத்த புதிய இயக்குநர்கள், நடிகர்கள், புதிய திரைப்படங்களை பாராட்டி பேசும் வழக்கத்தை ரஜினிகாந்த் பல ஆண்டுகளாகவே மெயின்டெயின் செய்து வருகிறார். அறிமுக இயக்குநர்களுக்கு இவரது பாராட்டு மிகப்பெரிய பூஸ்ட்டாக அமைந்து வருகிறது. சமூக வலைதளங்களில் மட்டுமில்லாமல் நேரிலும் படக்குழுவினரை கூப்பிட்டு பாராட்டுவதை ரஜினிகாந்த் வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் சமுத்திரக்கனி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள திரு மாணிக்கம் படத்தை தற்போது பாராட்டி ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். படத்தை அற்புதமான படைப்பு என்று அவர் உச்சி முகர்ந்துள்ளார்.
உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு படத்தை நந்தா பெரியசாமி சிறப்பாக இயக்கியுள்ளதாகவும் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் தான் ஒரு அற்புதமான இயக்குநர் என்பதை நிரூபித்துள்ளதாகவும் அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளதாகவும் பாராட்டியுள்ளார். படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ரஜினிகாந்த், படத்தில் கேரக்டராகவே வாழ்ந்துள்ள அன்பு நண்பர் சமுத்திரக்கனிக்கும் பாரதிராஜா மற்றும் நடிகர், நடிகைகளுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார். படத்தை தயாரித்திருக்கும் ரவி, லிங்குசாமிக்கும் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.
முன்னதாக வெளியான பம்பர் படத்தின் அதே ஒருவரிக்கதையாக உருவாகியுள்ளது திரு மாணிக்கம் படத்தின் திரைக்கதை. பல இடங்களில் பதற்றப்படவும் நெகிழவும் வைத்துள்ள இந்தப் படத்தில் நாடோடிகள் படத்தில் நடித்திருந்த அனன்யா லீட் கேரக்டரில் நடித்து தன்னுடைய நடிப்பால் அனைவரையும் அசரடிக்கிறார். முதிர்ச்சியான நடிப்பையும் வெளிப்படுத்தி அப்ளாசை அள்ளுகிறார். படம் நேர்மை குறித்த புரிதலை இளம் தலைமுறைக்கும் கடத்துவதில் வெற்றி பெற்றுள்ள நிலையில், சூப்பர்ஸ்டாரையும் படம் ஈர்த்துள்ளது படக்குழுவினரை மேலும் உற்சாகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.