தமிழில் தனக்கு பிடித்தமான கதைக்களங்கள் கிடைப்பதில்லை என்றும் அழுத்தமான கதைகள் கிடைக்காததால்தான் தான் தொடர்ந்து தமிழில் நடிப்பதில்லை என்றும் ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார்.
நடிகை ஸ்ருதிஹாசன் சூர்யா, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்துள்ள நிலையில், தமிழ், தெலுங்கில் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் அடுத்ததாக கூலி படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, சத்யராஜ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தின் சூட்டிங் சென்னையில் தற்போது நடந்து வருகிறது. இந்த சூட்டிங்கில் பங்கேற்ற ஸ்ருதிஹாசன், ரஜினிகாந்த்துடன் இணைந்து நடித்தது குறித்து உற்சாகம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்துவரும் ஸ்ருதிஹாசன், சமீபத்திய பேட்டியில் தன்னை வலிமையாக்கியது கடவுள் நம்பிக்கைத்தான் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த நம்பிக்கை தன்னுடைய பெற்றோரிடம் இருந்து வந்தது இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். கடவுள் நம்பிக்கை இல்லாத கமல்ஹாசனின் மகளிடம் இருந்து இத்தகைய பதில் வந்தது குறித்து ரசிகர்கள் வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். கடவுள் சக்தியை தான் நம்புவதாகவும் இந்த சக்தி தன்னை வாழ்க்கையில் பல்வேறு விஷயங்களுக்கு அழைத்து சென்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் தமிழில் தனக்கு பிடித்தமான கதைக்களங்கள் கிடைப்பதில்லை என்றும் அழுத்தமான கதைகள் கிடைக்காததால்தான் தான் தொடர்ந்து தமிழில் நடிப்பதில்லை என்றும் அவர் தனது சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். தற்போது அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருவதால் இந்தப் படம் அவருக்கு அழுத்தமான கேரக்டரை கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.