நடிகை ரம்பா 90களில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிப் படங்களில் பிசியான நடிகையாக வலம்வந்தவர். இவரது பல படங்கள் முன்னணி ஹீரோக்களுடன் அமைந்தன. ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி திருமணமாகி செட்டில் ஆன ரம்பா, தற்போது மீண்டும் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு பிள்ளையார் சுழி போடும்வகையில் விஜய் டிவியின் டான்ஸ் நிகழ்ச்சியில் அவர் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நடிகை ரம்பா விஜய், கார்த்திக் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர். உள்ளத்தை அள்ளித்தா படத்தில் இவரது என்ட்ரி மிகச்சிறப்பாக அமைந்தது, முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களின் கனவு லிஸ்ட்டில் இணைந்துவிட்டார் ரம்பா. விஜய்யுடனேயே சில படங்களில் நடித்துள்ள ரம்பா தொடர்ந்து கார்த்திக் உள்ளிட்ட மற்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழிகளில் இவர் நடித்த நிலையில் கடந்த 2010க்கு பிறகு இவர் நடிப்பில் ஈடுபடவில்லை. திருமணமாகி குடும்பம், குழந்தைகள் என செட்டிலான ரம்பா, தன்னுடைய ஹஸ்பண்டின் பிசினசில் உறுதுணையாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரம்பா, நல்ல கதை அமைந்தால் தமிழில் நடிப்பேன் என்று தெரிவித்திருந்தார். தமிழில் சிறப்பான கதைகள் அமையாததால் தான் நடிகைகள் மற்ற மொழிகளில் நடிக்க சென்று விடுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது விஜய் டிவியின் நிகழ்ச்சியில் ரம்பா பங்கேற்கவுள்ளார். விஜய் டிவியின் ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சி அடுத்தடுத்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்துவரும் நிலையில் இதன் அடுத்த சீசன் விரைவில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் கடந்த சீசனில் சாண்டி மாஸ்டர், ஸ்ரீதேவி மற்றும் மீனா பங்கேற்ற நிலையில் இந்த சீசனில் மீனாவிற்கு பதிலாக ரம்பா நடுவராக இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவலை அறிந்த ரசிகர்கள் தற்போது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். விரைவில் இந்த நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.