யஷ் நடிக்கும் ‘டாக்சிக்’ படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியான 10 மணி நேரத்தில் 50+ மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
‘கே.ஜி.எஃப் 2’ படத்துக்கு கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பைத் தொடர்ந்து யஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘டாக்சிக்’. இதனை கீது மோகன்தாஸ் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு மும்பையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை கே.வி.என் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ யஷ் பிறந்தநாளான நேற்று (ஜன.08) படக்குழு வெளியிட்டது.
இந்த க்ளிம்ப்ஸ் வீடியோவில் 1940-50 காலகட்டத்தில் ஒரு விலை உயர்ந்த காரில் இருந்து இறங்கும் யஷ், ஒரு சூதாட்ட கிளப்புக்குள் நுழைகிறார். கோட் – சூட், நீண்ட தாடி என அவரது தோற்றம் அதே ‘கே.ஜி.எஃப்’ ராக்கி பாய் தோற்றத்தை நினைவூட்டுகிறது. இந்த வீடியோ வெளியான 10 மணி நேரத்தில் 5 கோடிக்கும் அதிகமாக பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது. இப்படத்தை இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு வருகிறது.
மேலும் இப்படத்தை உலகளவில் வெளியிட யஷ் திட்டமிட்டு இருக்கிறார். இதற்காக பிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான 20th செஞ்சுரி ஃபாக்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அவர்களிடம் வெளிநாட்டு வெளியீட்டு உரிமையை அளிக்க முடிவு செய்திருக்கிறார். முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிவுற்றதைத் தொடர்ந்து, விரைவில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.