தமிழ்,தெலுங்கு, மலையாளம்,இந்தி என பிசியான நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா உடற்பயிற்சியின் போது காலில் காயம் ஏற்பட்டு கட்டுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து, எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க, என்னால் இரண்டு மூன்றுவாரம் நடக்கமுடியாது என்று பதிவிட்டுள்ளார். இதனால், படப்பிடிப்புகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
ராஷ்மிகா மந்தனா நடிப்பில் அண்மையில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அந்த படத்தில் அல்லு அர்ஜூனுடன் சேர்ந்து வந்துச்சே ஃபீலிங்சு பாடலுக்கு ராஷ்மிகா இறங்கி ஆட்டம் போட்டு இருந்தார். புஷ்பா 2 படம் தெலுங்கில் மட்டுமின்றி இந்தியிலும் சக்கைப்போடு போட்டது. தற்போது இவர், சல்மான் கானுக்கு ஜோடியகா சிக்கந்தர் படத்திலும், குபேரா, ரெயின்போ ஆகிய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் கதாநாயகியாக நடித்த சாவா என்ற திரைப்படம் வரும் பிப்.14ஆம் தேதி வெளியாகிறது.
இப்படி ராஷ்மிகா படுபிசியாக இருக்கும் இந்த நேரத்தில், காலில் காயம் ஏற்பட்டு நடக்க முடியாமல் வீட்டிலேயே முடங்கி இருக்கிறார். இதுகுறித்து ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராமில் காலில் கட்டுடன் இருக்கும் போட்டோவை பதிவு செய்து, சோகத்துடன் சில விஷயத்தையும் பகிர்ந்துள்ளார். அதில், அனைவரும் என்னை மன்னித்துவிடுங்கள், நான் உடற்பயிற்சியை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக காலில் காயம் ஏற்பட்டுவிட்டது. இதனால் அடுத்த சில வாரங்களுக்கு நான் வீட்டில் ஓய்வெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதனால், நான் எவ்வளவு மனவேதனை அடைந்தேன் என்பது என் கடவுளுக்கு மட்டுமே தெரியும். காலில் ஏற்பட்ட காயத்தால், தாமா. சிக்கந்தர் மற்றும் குபேரா படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது. இயக்குனர்கள் தாமதத்திற்கு மன்னிக்கவும், என்னால், தற்போது படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாது, விரைவில் குணமடைந்து படப்பிடிப்புக்கு திரும்புவேன் என்று பதிவிட்டுள்ளார்.