சென்னை எனக்கு பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்துள்ளது: சமந்தா!

நடிகை சமந்தா, தென்னிந்தியா மட்டும் இல்லாமல், இந்திய சினிமாவில் மிகவும் முக்கியமான நடிகையாக உள்ளார். இவர் தமிழ் சினிமாவில் இருந்து தனது திரை வாழ்க்கையைத் தொடங்கி இருந்தாலும், இன்றைக்கு இந்தியாவின் மோஸ்ட் வாண்டட் ஹீரோயினாக வளர்ந்து நிற்கின்றார். இந்நிலையில் சமந்தா சென்னையில் நடைபெற்ற Pickle Ball விளையாட்டுத் தொடரின் நிகழ்ச்சியில், சென்னை சூப்பர் சேம்ப்ஸ் என்ற அணியின் உரிமையாளராக அவர் கலந்து கொண்டு பேசினார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

நடிகை சமந்தா, தமிழ் சினிமாவில் இருந்து தனது திரை வாழ்க்கையைத் தொடங்கி, இன்றைக்கு இந்திய சினிமாவில் முக்கியமான நடிகையாக வளர்ந்து நிற்கின்றார். நடிகையாக மட்டும் இல்லாமல், ஒரு பெண்ணாக அதுவும் தைரியமான பெண்ணாக பலருக்கும் முன் உதாரணமாக விளங்குகின்றார். இவரது சொந்த வாழ்க்கையில் பல்வேறு, வருந்தத்தக்க நிகழ்வுகள் நடந்தாலும், சமந்தா தொடர்ந்து உத்வேகமாக உள்ளார். இதுமட்டும் இல்லாமல், மையோசிடிஸ் என்ற அரியவகை நோய் மூலமும் சமந்தா பாதிக்கப்பட்டுள்ளார். அந்த நோயில் இருந்து வெற்றிகரமாக மீண்டு வந்து கொண்டு உள்ளார்.

சமந்தா தற்போது பான் இந்தியா ஸ்டாராக மாறிவிட்டார். மோஸ்ட் பேயிட் ஆர்ட்டிஸ்ட்டாகவும் வலம் வருகின்றார். இப்படியான நிலையில் சமந்தா, சினிமாவில் மட்டும் இல்லாமல், பல்வேறு சமூக நிகழ்வுகளிலும் ஆர்வம் காட்டி வருகின்றார். ஏற்கனவே கோசாலை, ஆதரவற்ற குழந்தைகளுக்கான ஆசிரமத்திற்கு உதவுவது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில் சமந்தா ஈடுபட்டு வருகின்றார். இப்படியான நிலையில்தான் தற்போது, Pickle Ball என்ற விளையாட்டில், சென்னை அணியை வாங்கியுள்ளார். இந்த விளையாட்டுத் தொடர் தொடர்பான நிகழ்ச்சியில், அவர் கலந்து கொண்டு பேசும்போது, பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது:-

கடந்த ஆறு மாதமாக இந்த நிகழ்வுக்காக நாங்கள் திட்டமிட்டிருந்தோம். நான் இந்த நிகழ்ச்சிக்கு நடிகையாக வரவில்லை. தொழில் முனைவராக, சென்னை அணியின் உரிமையாளராக வந்துள்ளேன். நான் சென்னை பொண்ணு, சென்னைக்கு வரும்போது எல்லாம் எனக்கு அவ்வளவு மகிழ்ச்சி மற்றும் அவ்வளவு சௌரியம். சென்னை எனக்கு பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக நெவர் எவர் கிவ் அப் என்ற மனநிலையை எனக்கு கற்றுக் கொடுத்தது சென்னைதான். Pickle Ball விளையாட்டைப் பொறுத்தவரையில் அனைவரும் பாலின பேதமின்றி, விளையாடவேண்டும். நானே இந்த விளையாட்டினை விளையாடுகின்றேன். எனவே அனைவராலும் இந்த விளையாட்டினை விளையாட முடியும். விளையாடினால் நமது உடலும் மனமும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

இந்தியாவைப் பெருமைப்படுத்த இந்த விளையாட்டினை அனைவர் மத்தியிலும் கொண்டு செல்ல எனது முதல் படியை நான் எடுத்து வைக்கின்றேன். நான் ஒரு விஷயத்தைச் செய்கின்றேன் என்றால், அதனை ஒரு வேலையாக நினைத்துச் செய்ததில்லை. மேலும், எப்போதுமே ஒரு விஷயத்தில் கவனம் செலுத்துகின்றேன் என்றால், கனவோடும், நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் ஆசையோடுமே செய்து வருகின்றேன். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் தனது அணியான சென்னை சூப்பர் சாம்ப்ஸ் அணியின் ஜெர்ஸியை அறிமுகம் செய்து வைத்தார். மேலும் பிக்கிள் பால் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுடன் இணைந்து விளையாடவும் செய்தார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரிகளையும் பகிர்ந்துள்ளார் சமந்தா. பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.