விஜய் ஏதோ நல்லது செய்யவேண்டும் என்று ஆசைப்படுகிறார்: பார்த்திபன்!

நண்பர் விஜய்க்கு அரசியல் அவசியமே இல்லை. தமிழ் சினிமாத்துறையில் அவர் ஒரு ராஜாங்கம் நடத்தி வருகிறார் என்று பார்த்திபன் கூறியுள்ளார்.

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். 2026 இல் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக அவர் அறிவித்துள்ளார். இந்நிலையில், விஜயின் அரசியல் செயல்பாடு குறித்து சாத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பார்த்திபனிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர் கூறியதாவது:-

நண்பர் விஜய்க்கு அரசியல் அவசியமே இல்லை. தமிழ் சினிமாத்துறையில் அவர் ஒரு ராஜாங்கம் நடத்தி வருகிறார். அவர் தான் அடுத்த சூப்பர் ஸ்டார். கலெக்சன் மன்னன் அவர் தான். ரூ.200 கோடி சம்பளம். இப்படி ஒரு சிம்மாசனத்தை விட்டு விட்டு அவர் எதற்கு மக்கள் பிரச்சனைகளை பேச வேண்டும். அவர் ஏதோ நல்லது செய்யவேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

மாற்றம் ஒன்று தான் மாறாதது. யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம். ஏற்கனவே சில நடிகர்கள் அரசியலுக்கு வந்து பின்வாங்கியதில் விஜயும் பின்வாங்கி விடுவாரோ என்ற சந்தேகம் உள்ளது. இருந்தாலும் அந்த சந்தேகத்தை ஊதி பெரிதாக்கி நல்லது செய்ய வருபவரை நாம் ஏன் பயமுறுத்த வேண்டும். அதனால் விஜய் முனைப்புடன் அரசியலில் செயல்படட்டும்.

வேங்கைவயல் விவகாரத்தில் 3 பேரை குற்றவாளிகள் என பதிவு செய்வதற்கு ஏன் எவ்வளவு கால தாமதம் ஆனது. காவல்துறையினருக்கு நிறைய அழுத்தங்கள் உள்ளது. இந்த அழுத்தங்களால் புதிய புதிய விவகாரங்கள் வரும் போது பழைய பிரச்சனைகள் மிக பழைய விஷயமாகி விடுகின்றன. தற்போது இந்த விவகாரத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி. இனிமேல் இந்த விவகாரத்தில் காவல்துறை துரிதமாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

எதிர்க்கட்சியாக இருப்பவர்கள் ஆளும் கட்சியை கடுமையாக விமர்சிக்கிறார்கள். அதே சமயம் ஆளுங்கட்சி எதிர்க்கட்சியாக வரும்போது அதே விமர்சனத்தை வைக்கிறார்கள். இங்கே எதிர்ப்பதற்கு ஏதோ ஒரு பிரச்சனை உள்ளது. ஆகவே அரசை ஆதரித்து நல்ல விசயத்தை வாங்கி கொள்வது நல்லது என்று நினைக்கிறேன். ஆனால் அரசை கண்மூடித்தனமாக ஆதரிக்காமல் அவர்கள் தவறு செய்யும் போது சுட்டிக்காட்ட வேண்டியது மக்களின் கடமை. ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கு மக்கள் போராடிய பின்பு தான் தீர்வு கிடைத்தது. இவ்வாறு அவர் கூறினார்.