மராட்டிய பேரரசர் சத்ரபதி சிவாஜி – சாயிபாய் தம்பதியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘சாவா’. லக்ஸ்மன் உடேகர் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் விக்கி கவுசல் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவாக நடித்துள்ளார். நடிகை ராஷ்மிகா மந்தனா சம்பாஜியின் மனைவி மகாராணி ஏசுபாய் கதபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 14ம் தேதி வெளியாக உள்ளது.
சமீபத்தில் வெளியான இதன் டிரெய்லரில், மராட்டியத்தின் பாரம்பரிய நாட்டுப்புற நடன வடிவமான ‘லெஜிம்’ இசைக் கருவியை வாசித்தபடி விக்கி கவுசலும் ராஷ்மிகா மந்தனாவும் நடனமாடுகிறார்கள். இந்தக் காட்சிக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. படத்தைத் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.
இந்நிலையில் மராட்டிய நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவை சந்தித்த படத்தின் இயக்குனர் லக்ஷ்மன் உடேகர், “லெஜிம் நடனம் சத்ரபதி சம்பாஜி மகாராஜை விட பெரியதல்ல, அதனால் அந்தக் காட்சியை படத்திலிருந்து நீக்குகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.