ஜிஎஸ்டி வரி விதிப்பில் திரைத் துறையும் சூதாட்டமும் ஒரே பட்டியலில் இருப்பது வருத்தமாக இருக்கிறது எனவும், அதனை வரும் மத்திய பட்ஜெட்டில் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறார் நடிகர் விஷால்.
நாளை மத்திய அரசின் 2025 – 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து 2023ஆம் ஆண்டு வரை தொடர்ந்து ஐந்து முறை முழுமையான பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருக்கிறார். 2024 மக்களவைத் தேர்தல் காரணமாக இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார். தொடர்ந்து ஜூலை மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், எட்டாவது முறையாக நாளை மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டை தொழில்துறையினர், தொழில் முனைவோர், பொதுமக்கள், சினிமா துறையினர் உள்ளிட்ட பலரும் ஆர்வத்தோடு எதிர்நோக்கி உள்ளனர்.
இந்நிலையில், ஜிஎஸ்டி வரி விதிப்பில் திரைத்துறையும் சூதாட்டமும் ஒரே பட்டியல் இருப்பது வருத்தமாக இருக்கிறது என கூறியுள்ளார் நடிகர் விஷால். சென்னை பாரிஸ் கார்னர் காளிகாம்பாள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
கோவிலுக்கு வந்தால் நேர்மறையான எண்ணங்கள் கிடைக்கும். குறிப்பாக அம்மனை தரிசிக்கும் போது மனதில் உள்ள பாரம் குறைவது போல இருக்கிறது. ஏழை பெண் குழந்தைகளின் படிப்புக்காக இன்று அம்மனை தரிசனம் செய்திருக்கிறேன். திரைத் துறையில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கிறது. கடந்த வாரம் ஆறு சிறிய பட்ஜெட் படங்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் அதில் எத்தனை படங்கள் கமர்சியல் ரீதியாக வெற்றி அடைந்தது என பார்க்க வேண்டும். எனவே சின்ன படங்கள் எடுப்பவர்கள் ஆலோசனை கேட்டு உள்ளே வர வேண்டும். தயாரிப்பாளர்கள் கவுன்சில் வழிகாட்டுதலை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். சிறிய படங்களை வெளியிட பல்வேறு சிரமங்கள் உள்ளன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது. சில பொறுக்கிகள் யார் சொன்னாலும் கேட்க மாட்டார்கள். அதனால் பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும். தற்காப்பு என்பது மிக முக்கியம். எனவே காலேஜுக்கு போகும்போது பெண்கள் தற்காப்பு கலையை கற்றுத் தேர வேண்டும். என்னுடைய அரசியல் பயணம் குறித்து நவம்பர் டிசம்பர் மாதத்தில் அறிவிப்பு இருக்கும். ஆனால் அரசியலுக்கு வரக்கூடாது என்பது தான் எண் எண்ணம். இன்னொரு கட்சி, இன்னொரு கொடி, இன்னொரு தலைவர் என இருக்க வேண்டாம். அரசியல்வாதிகள் சரியாக இருந்தால் நாங்கள் எங்கள் தொழிலை மட்டுமே பார்ப்போம். சூட்டிங் செல்லும் போது தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை, மருத்துவ வசதி இல்லை என பொதுமக்கள் எங்களிடம் கூறும்போது சங்கடமாக இருக்கிறது. அரசு இதையெல்லாம் சரி செய்ய வேண்டும்.
நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. திரைத்துறையும் சூதாட்டமும் ஒரே பட்டியலில் இருக்கிறது. ஒரே ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இது மிகவும் வருத்தம் தரக்கூடிய விஷயம். அதனால் மத்திய பட்ஜெட்டில் அதனை ரத்து செய்ய வேண்டும். இந்தியாவிலேயே தமிழ் திரை உலகில் மட்டுமே இரட்டை வரி விதிக்கப்படுகிறது. 18 சதவீதம் ஜிஎஸ்டியும், 8 சதவீதம் உள்ளாட்சி வரியும் வசூலிக்கப்படுகிறது. மத்திய பட்ஜெட்டில் திரைத்துறைக்கு நல்ல அறிவிப்பு வந்தால் நாங்களே பஸ்ஸை பிடித்து சென்றாவது நிதி அமைச்சருக்கு நன்றி சொல்வோம். இவ்வாறு அவர் கூறினார்.