எனது முந்தைய உறவுகளில் நேர்மை இல்லாமல் இருப்பவர்களால் நான் காயமடைந்த நேரங்கள் இருந்தன என்று பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.
கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட்டை கலக்கி வந்த நடிகை பிரியங்கா சோப்ரா, தற்போது டோலிவுட்டிலும் காலடி எடுத்து வைக்கிறார் என தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில், பிரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனஸை சந்திக்கும் முன் தனக்கு துணையாக வருபவரிடம் தான் தேடிய குணங்கள் என்ன என்பதை பற்றி விரிவாக பேசினார். மேலும், அவர் தனது காதலனைத் தேடிய பயணம் குறித்தும் பேசினார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு பாடகர் நிக் ஜோனாஸுடன் டேட்டிங் செய்வது பற்றி யோசிக்கத் தொடங்கிய நேரத்தைப் பற்றி பிரியங்கா சோப்ரா மனம் திறந்து பேசியுள்ளார். ஹார்பர்ஸ் பஜாருடனான ஒரு புதிய நேர்காணலில் பிரியங்கா சோப்ரா இதுகுறித்து பேசியுள்ளார். அப்போது, அவர் ஒரு குடும்பத்தை விரும்பும் ஒருவருடன் இருக்க விரும்புவதாகக் கூறினார்.
மேலும் அந்தப் பேட்டியில், “நான் விரும்பும் நபரிடம் சில தகுதிகள் இருக்க வேண்டும் என நினைத்தேன். அதற்கு காரணம் இதற்கு முன் நான் சந்தித்த சில நபர்கள் அதன் முக்கியத்துவத்தை உணர்த்தினர். அதில் முதலாவது நேர்மை தான். ஏனென்றால் எனது முந்தைய உறவுகளில் நேர்மை இல்லாமல் இருப்பவர்களால் நான் காயமடைந்த நேரங்கள் இருந்தன. இரண்டாவது, குடும்பத்தின் மதிப்பை அந்த நபர் உணர வேண்டும்.
மூன்றாவது, அவர் தனது தொழிலை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் நான் என்னுடைய வேலையை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறேன். நான்காவது, படைப்பாற்றல் மற்றும் என்னுடன் பெரிய கனவு காணும் கற்பனை கொண்ட ஒருவரை நான் விரும்பினேன். ஐந்தாவதாக என்னைப் போலவே உந்துதலும் லட்சியமும் கொண்ட ஒருவரை நான் விரும்பினேன். அவ்வாறு கிடைத்த நபரைத் தான் ஏற்க வேண்டும் என எண்ணிணேன்” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “நான் விரும்பிய இந்க அளவுகோல்களை எல்லாம் நிக் பூர்த்தி செய்தார். அவர் அப்படி செய்யவில்லையென்றால் நான் அவரை திருமணம் செய்திருக்க மாட்டேன். உங்களை மதிக்கும் ஒருவரை நீங்கள் தேட வேண்டும். மரியாதை என்பது அன்பு மற்றும் பாசத்தில் இருந்து வேறுபட்டது. அதனால், நீங்கள் உங்ரள் இளவரசனைக் கண்டுபிடிக்கும் வரை நீங்கள் நிறைய தவளைகளை முத்தமிட வேண்டும்” எனக் கூறினார்.
பிரியங்கா சோப்ரா- நிக் திருமணம் 2018 டிசம்பர் 1 மற்றும் 2ம் தேதிகளில் ஜோத்பூரில் உள்ள உமைத் பவன் அரண்மனையில் கிறிஸ்தவ மற்றும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். ஜனவரி 2022 இல், இருவரும் வாடகைத் தாய் மூலம் மகள் மால்டி மேரியை வரவேற்றதாக அறிவித்தனர்.
நடிகை பிரியங்கா சோப்ரா தனது சகோதரர் சித்தார்த் சோப்ராவின் திருமண கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள தற்போது இந்தியா வந்துள்ளார். கடந்த மாதம், அவர் தெலுங்கானாவில் உள்ள சில்கூர் பாலாஜி கோயிலுக்குச் சென்றபோது தொடர்ச்சியான படங்களையும் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை என்றாலும், பிரியங்கா சோப்ரா எஸ்.எஸ்.ராஜமௌலியின் அடுத்த படத்தில் மகேஷ் பாபுவுடன் நடிக்க உள்ளார் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.