சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
ரஜினிகாந்த் பாபா மீது அதிக பற்று கொண்டவர். தனது இல்லத்தில் கூட பாபா படம் பெரிய அளவில் உள்ளது. அதே நேரத்தில் யோகா மீதும் அதிக ஆர்வம் கொண்டவர். 74 வது வயதில் இருக்கும் சூப்பர் ஸ்டார் இப்போது மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார். இது தொடர்பாக பலரும் அவரிடம் கேள்வி எழுப்பும் போது எல்லாம், தனது ஸ்டைலான சிரிப்பையே பதிலாக தந்துள்ளார். இப்படி இருக்கும்போது, தனது உற்சாகத்திற்கும் சுறுசுறுப்பிற்கும் காரணம் என்ன எனக் கூறி சுமார் 4 நிமிடங்களுக்கு வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் கூறியுள்ளதாவது:-
நான் இப்போது ராஞ்சியில் உள்ள ஆசிரமத்தில் உள்ளேன். இந்த இடத்திற்கு நான் மூன்றாவது முறையாக வருகின்றேன். கடந்த 2002 ஆம் ஆண்டுதான் முதல் முறையாக இங்கு வந்தேன். ஆனால் இம்முறை நான் இரண்டு நாட்கள் முழுவதும் இங்கு இருக்கும் அளவிற்கு நேரம் செலவழிக்க முடிந்தது. இங்குள்ள குருவின் அறையில் அமர்ந்து யோகாசனம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. காலையில் 5 மணியில் இருந்து ஒரு மணி நேரம் நான் அங்கு யோகாசனம் செய்தேன். அந்த ஒரு மணி நேரம் எனக்கு எப்படி போனது என்றே தெரியவில்லை. மற்றவர்கள் என்னை எழுப்பும் போது தான் ஒரு மணி நேரம் கடந்துவிட்டது என்று தெரிந்துகொண்டேன்.
இப்போது என்னைப் பார்ப்பவர்கள் பலரும் கூறுவது, ரொம்பவும் உற்சாகமாக இருக்கிறீர்கள், உங்களைப் பார்த்தாலே, பாசிடிவ் எனர்ஜி கிடைக்கிறது. அதனுடைய சீக்ரெட், நான் க்ரியா யோகாசனம் செய்து கொண்டு இருப்பதுதான். க்ரியா யோகாசனம் செய்ய தொடங்கியதில் இருந்து, எனக்குள் ஏற்பட்ட மாற்றங்களை எப்படி விளக்குவது எனத் தெரியவில்லை. அது ஒருவிதமான அமைதி. கடந்த 21 ஆண்டுகளாக நான் இந்த யோகாசனம் செய்து வருகின்றேன். ஆனால் எந்த மாற்றமும் எனக்கு தொடக்கத்தில் தெரியவில்லை. ஆனால் போக போக மாற்றங்களை உணர முடிந்தது. இந்த க்ரியா யோகாசனம் தான் சீக்ரெட். இதை யார் தெரிந்து வைத்துள்ளார்களோ, அவர்கள் எல்லாம் கொடுத்து வைத்தவர்கள். அது காலத்திற்கும் தொடரவேண்டும். 14 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது இங்கு வந்துள்ளேன். இனிமேல் ஆண்டுக்கு ஒருமுறை இங்கு வரவேண்டும் என நினைக்கின்றேன். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.