நடிகை பார்வதி நாயருக்கு கடந்த வாரம் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் இன்று சென்னையில் கோலாகலமாக திருமணம் நடந்துள்ளது. அந்த திருமணத்தில் திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளனர்.
மலையாள நடிகையான நடிகை பார்வதி நாயர், தமிழில் ஜெயம் ரவி நடித்த நிமிர்ந்து நில் படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடித்து தமிழில் அறிமுகம் ஆனார். அந்த படத்திற்கு பின், அஜித், அருண் விஜய் நடித்த என்னை அறிந்தால் படத்தில், அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படம் எப்படி அருண் விஜய்யின் திரைப்பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியதோ அதை போல, பார்வதி நாயருக்கும் அந்த படம் பெயர் சொல்லும் படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து, பார்த்திபன் இயக்கத்தில் உருவான கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தில், அவர் ஒரு வித்தியாசமான ரோலில் நடித்தார். பின் எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் லோகேஷ் கனகராஜின் எழுத்தில் உருவான வெள்ள ராஜா என்ற இணைய தொடரில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இத்தொடரில் , பாபி சிம்கா, காயத்ரி சங்கர் யுதன் பாலாஜி, காளி வெங்கட் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். அண்மையில் வெளியான கோட் படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்திருந்தார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என அடுத்தடுத்து பிஸியாக நடித்து வரும் பார்வதி நாயருக்கு கடந்த வாரம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அந்த போட்டோக்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார். இந்நிலையில், இன்று நடிகை பார்வதி நாயருக்கு சென்னையில் திருவான்மியூரில் திருமணம் நடந்துள்ளது. சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஆஷ்ரித் அசோக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கோலாகலமாக நடந்த இந்த திருமணத்தில் திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். இவர்களின் திருமண போட்டோ இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.