டாக்டர் எங்கே? உடனே வரனும்: அரசு மருத்துவமனையில் நடிகர் கஞ்சா கருப்பு!

போரூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லை என்று நடிகர் கஞ்சா கருப்பு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இது தொடர்பாக அரசு மருத்துவமனையில் உள்ள ஊழியர்கள் உடன் நடிகர் கஞ்சா கருப்பு வாக்குவாதம் செய்யும் வீடியோ வைரல் ஆகி வருகிறது. அதில், காலை 8 மணி முதல் பொதுமக்கள் காத்து இருக்கின்றனர். மருத்துவரின் பெயரையோ அல்லது மருத்துவரின் தொலைபேசி எண்ணையோ தர மறுக்கின்றனர். மதுரையில் சிறப்பாக மருத்துவர்கள் செயல்படுகின்றனர். ஆனால் சென்னையில் மருத்துவர் சரியாக கவனிப்பது இல்லை. இங்கு மருத்துவமனையில் ஏசி, பேன் உள்ளிட்டவை ஓடிக் கொண்டு இருக்கிறது. ஏராளமான மக்கள் காத்து இருக்கின்றனர். ஆனால் இன்னும் மருத்துவர் வராமல் அவதியுற்று வருகின்றனர் என கஞ்சா கருப்பு கூறி உள்ளார்.

மேலும் மருத்துவமனையில் என்ன நடந்தது என்பது குறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு விளக்கம் அளித்த நடிகர் கஞ்சா கருப்பு கூறுகையில், எனக்கு கால்வலி என்பதால் ஊசி போட மருத்துவமனைக்கு சென்று இருந்தேன். 8 மணிக்கு வரும் மருத்துவர் தனி கிளினிக் வைத்து உள்ளதால் மதியம் 3 மணிக்கு வருவார் என்று சொல்கிறார்கள். இதை பற்றி மீடியாவில் சொல்லாதீர்கள் என்று கூறுகிறார்கள். ஒருவர் மண்டை உடைந்து ரத்தம் வருகிறது. நாய் கடித்து ஒருவர் சிகிச்சைகாக வந்து உள்ளார். ஆனால் அங்கு மருத்துவரே இல்லை. டாக்டர் பெயரை கேட்டாலே சொல்ல மறுக்கிறார்கள். 200 பேர் காத்து இருக்கிறார்கள். ஆனால் சிகிச்சை அளிக்க மருத்துவர்களே இல்லை என தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில் நடிகர் கஞ்சா கருப்புவின் குற்றச்சாட்டு மற்றும் புகார்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் விளக்கம் அளித்து உள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்களுக்கு கடும் பணி சுமை உள்ளது. இன்று தைப்பூச விடுமுறை நாள் என்பதால் மாற்று பணிக்கு வர வேண்டிய மருத்துவர் யாராவது வர காலதாமதம் ஆகி இருக்கலாம். துறையின் அதிகாரிகள் உடன் தொடர்பு கொண்டு பிரச்னையை தீர்க்க ஆவண செய்கிறேன். இதை சம்பந்தப்பட்ட துறை அமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு செல்வேன் என தெரிவித்து உள்ளார்.