ஹிட் கொடுத்தாலும் தெலுங்கில் வாய்ப்பு கிடைக்கவில்லை: ஐஸ்வர்யா ராஜேஷ்!

ஐஸ்வர்யா ராஜேஷ் சங்கராந்தி வஸ்துனானு படத்தின் மூலம் தெலுங்கில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றார். அனில் ரவிபுடி இயக்கத்தில் வெங்கடேஷ் நடிப்பில் வெளியான இப்படம் ரூ.300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. ராம் சரணின் கேம் சேஞ்சர் மற்றும் பாலகிருஷ்ணா தாகு மகாராஜ் ஆகிய படங்களுடன் போட்டியிட்ட இப்படம் பொங்கல் விழா வெற்றியாளராக மாறியது.

ஐஸ்வர்யா ராஜேஷ் சங்கராந்தி வஸ்துனானு படத்திற்கு முன்பு தெலுங்கில் கௌசல்யா கிருஷ்ணமூர்த்தி, ரிபப்ளிக் மற்றும் வேறு சில படங்களிலும் நடித்துள்ளார். ஆனால் அவை எதுவும் அவருக்கு பெரிய வெற்றியைத் தரவில்லை. சங்கராந்தி வஸ்துனானு திரைப்படத்தின் மூலம் தான் அவருக்கு முதல் வெற்றி கிடைத்தது. ஐஸ்வர்யா ராஜேஷ் நடிகர் வெங்கடேஷின் மனைவியாக நடித்து மக்களைக் கவர்ந்தார். அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. வெங்கடேஷுடன் அவர் படத்தில் போட்டி போட்டு நடித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது. அந்தப் பேட்டியில், “தெலுங்கில் எனது சங்கராந்தி வஸ்துனானு படம் வெற்றி பெற்ற போதும் எனக்கு இதுவரை ஒரு பட வாய்ப்பு கூட வரவில்லை என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கருத்து தெரிவித்தார். தெலுங்கு மக்கள் தனக்கு வாய்ப்புகளை வழங்க கால அவகாசம் தேவை என்று நினைப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும் “நான் கமர்ஷியல் டைப் ஹீரோயின் இல்லை. அதனால்தான் எனக்கு எந்த வாய்ப்புகளும் வரவில்லை என்று நினைக்கிறேன்” என்றும் கூறியிருக்கிறார். அத்துடன், சங்கராந்தி வஸ்துனானு படப்பிடி்பபு மற்றும் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டதன் காரணமாக சில தமிழ் பட வாய்ப்புகளை நான் தவறவிட்டேன். தெலுங்கில் இன்னும் நல்ல படங்களில் நடிக்க விரும்புகிறேன். ஆனால் நான் அதற்காக யாரிடமும் வாய்ப்பு கேட்கவில்லை. அப்படிக் கேட்பது எனக்குப் பிடிக்காது. கிடைக்கும் ஆஃபர்களை கொடுத்துட்டு கிளம்புறேன். தமிழில் பெரும்பாலான இயக்குனர்கள் என்னை மனதில் வைத்து நல்ல கதைகளை எழுதுகிறார்கள்” என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கூறினார்.